தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து அணிகள் முகநூல்
கிரிக்கெட்

SAvsNZ | உலகக் கோப்பை: அரையிறுதியை நெருங்கப் போவது யார்? தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பலப்பரிட்சை

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியானது பல அதிரடி ஆட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறது. இதில் தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து அணிகள் இன்று மதியம் 2 மணிக்கு மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றனர்.

Viyan

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

தென்னாப்பிரிக்கா

போட்டிகள் - 6, வெற்றிகள் - 5, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 10

புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது

சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 431 ரன்கள்

சிறந்த பௌலர்: மார்கோ யான்சன் - 13 விக்கெட்டுகள்

தென்னாப்பிரிக்கா

தங்கள் சிறப்பான உலகக் கோப்பையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. நெதர்லாந்துக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்த அந்த அணி, மற்ற 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த அந்த அணி, கடைசி போட்டியில் பாகிஸ்தானை கடைசி விக்கெட்டின் உதவியால் வெற்றி பெற்றது. இந்த ஒரு வெற்றி தான் அந்த அணி சேஸிங்கின்போது பெற்ற வெற்றி.

நியூசிலாந்து

போட்டிகள் - 6, வெற்றிகள் - 4, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8

புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது

சிறந்த பேட்ஸ்மேன்: ரச்சின் ரவீந்திரா - 406 ரன்கள்

சிறந்த பௌலர்: மிட்செல் சான்ட்னர் - 14 விக்கெட்டுகள்

நியூசிலாந்து

இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என 4 அணிகளையும் தங்கள் முதல் 4 போட்டிகளில் வீழ்த்தி அபாரமாக உலகக் கோப்பையை தொடங்கியிருந்தது நியூசிலாந்து. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது அந்த அணி. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு முந்தைய போட்டியில் கடைசி பந்து வரை போராடி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

மைதானம் எப்படி இருக்கும்?

புனே மைதானத்தில் இதற்கு முன் இலங்கை vs ஆப்கானிஸ்தான் போட்டி ஓரளவு பேட்டிங், பௌலிங் இரண்டுக்குமே ஒத்துழைப்பு கொடுத்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், போகப் போக பேட்டிங் எளிதாக இருந்தது. அதனால், சேஸ் செய்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பனி போன்ற விஷயங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பௌலிங்கை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம்.

மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

ஒரு வெற்றி... அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிடலாம்!

தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 12 போட்டிகள் பெற்றுவிடும். அதன் மூலம் எப்படியும் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்றாலும், அதிகாரபூர்வமாக அதைச் சொல்லிவிட முடியாது. அதனால் குறைந்தபட்சம் அடுத்த சுற்றில் ஒரு காலையாவது அந்த அணி வைத்துவிடும். முதலில் பேட்டிங் செய்து மட்டுமே வெற்றி பெற்றுவந்த தென்னாப்பிரிக்காவுக்கு பாகிஸ்தானுக்கு எதிராக சேஸிங்கில் பெற்ற வெற்றி பெறும் நம்பிக்கையைக் கொடுக்கும்

என்ன பிரச்னை?

என்ன ஒரேயொரு பிரச்னை என்றால், முதல் இன்னிங்ஸில் வரும் பெரிய ஸ்கோர்கள் சேஸிங்கில் அந்த அணிக்கு வருவதில்லை. மார்க்ரம் தவிர்த்து மற்ற வீரர்களும் சேஸிங்கின்போது கொஞ்சம் நிதானமாக தங்கள் இன்னிங்ஸை கட்டமைக்கவேண்டும். பௌலர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், கொஞ்சம் கூடுதலாக ரன்கள் வாரி வழங்குகிறார்கள். அது முக்கியமான போட்டிகளில் காலை வாரலாம். அதனால் அவர்கள் அதை சரிசெய்யவேண்டும். கடந்த போட்டியில் விளையாடாத ரபாடா இந்தப் போட்டியில் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம்.

நியூசிலாந்தின் பாதை மாறுகிறதா?

அடுத்தடுத்து தோல்விகள் அடைந்து கொஞ்சம் இக்கட்டான நிலையில் இருக்கிறது நியூசிலாந்து. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளின் வெற்றிகள் அவர்களுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும். இந்தப் போட்டியில் வெற்றி பெறத் தவறும் பட்சத்தில் அந்த அணி விரைவில் டாப் 4 இடத்தை இழக்கலாம். அதனால் இந்தப் போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியம். கடந்த 2 போட்டிகளில் அந்த அணியில் இருந்த விரிசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கியிருக்கின்றன.

ரச்சின் ரவீந்திரா மட்டுமே அந்த அணிக்கு சீராக எல்லா போட்டிகளிலும் ஸ்கோர் செய்துகொண்டிருக்கிறார். கான்வே முதல் லாதம் வரை சீனியர்கள் கூட பெரிய இன்னிங்ஸ்களை சீராக கொடுக்கத் தவறுகிறார்கள். நன்றாக இருந்த அந்த அணியின் பந்துவீச்சும் கூட கடந்த போட்டியில் கொஞ்சம் காலை வாரியது. தென்னாப்பிரிக்க பேட்டிங்கோ, ஆஸ்திரேலியாவை விட கொடுமையாக இருக்கும். நியூசிலாந்து பௌலர்கள் அதை சமாளிக்கத் தவறினால் நிச்சயம் இந்தப் போட்டியும் அவர்களுக்குக் கடினமாகிவிடும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

தென்னாப்பிரிக்கா - மார்கோ யான்சன்: பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் கலக்குகிறார் யான்சன். நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டான ரச்சின் ரவீந்திராவை இவர் எப்படி கையாள்வர் என்பது ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.

நியூசிலாந்து - டிரென்ட் போல்ட்: புனேவில் தொடக்கத்தில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதுவரை தன் முழு தாக்கத்தையும் ஏற்படுத்தாத போல்ட், பலமான தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கை தொடக்கத்திலேயே ஆட்டம் காண வைக்கலாம்.

போட்டி 32: தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து

மைதானம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 1, மதியம் 2 மணி