தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் cricinfo
கிரிக்கெட்

’WTC பைனலுக்கு செல்வது இனி சுலபம்..’ - 2 சதம் விளாசிய SA வீரர்கள்! இந்தியா-ஆஸி 2 அணிக்கும் ஆபத்து?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான ரேஸில் தென்னாப்பிரிக்கா அணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

Rishan Vengai

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஆசிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா அணி. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு செல்ல இன்னும் தென்னாப்பிரிக்கா தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தொடரை இழந்துள்ளதால் “இந்தியா, ஆஸ்திரேலியா இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா” முதலிய 5 அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும் முதலிரண்டு இடத்திற்கு போட்டிபோடுகின்றன.

south africa

வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாப்பிரிக்கா, மீதமிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்றால் கூட இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும். இதில் மேலும் சாதகமான விசயம் என்னவென்றால் தென்னாப்பிரிக்கா மீதமிருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான 1 போட்டியோடு வெளிநாட்டு தொடர்களை முடிக்கவிருக்கிறது.

மீதமிருக்கும் 4 போட்டிகளில் சொந்த மண்ணில் நடக்கும் இரண்டு தொடரில் இலங்கை (இரண்டு டெஸ்ட்) மற்றும் பாகிஸ்தானுக்கு (இரண்டு டெஸ்ட்) எதிராக சொந்த மண்ணில் மோதுகிறது.

தென்னாப்பிரிக்கா தகுதிபெறுவதற்கான சந்தர்ப்பங்கள்..

* தென்னாப்பிரிக்கா தனது கடைசி ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், அவர்கள் பிசிடி புள்ளிகளில் 69.44% ஐ அடைவார்கள், இது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற போதுமானது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகள் ஒன்றோடு ஒன்று மோதியபிறகு ஒருவரால் மட்டுமே PCT 69.44%-ஐ கடக்க முடியும் என்பதால், தென்னாப்பிரிக்கா 5 போட்டிகளிலும் வென்றால் கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

* தென்னாப்பிரிக்கா நான்கில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்தால், அது 63.89% என்ற PCT-க்கு செல்லும். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் இறுதித் தகுதிக்கு மற்றவர்களின் வெற்றி தோல்வி உதவியாக தேவைப்படும்.

SA vs BAN

* அதேபோல நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தில் தோற்றால், அவர்களின் PCT 61.11% PCT ஆகக் குறையும். இங்கிருந்து இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டுமானால் பிற அணிகளின் உதவி தேவைப்படும்.

* கடந்த 2021-க்கு பிறகு தென்னாப்பிரிகக சொந்த மண்ணில் தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிராக 2 சதங்களை விரட்டிய வீரர்கள்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டிய முக்கியமான போட்டியாக வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா.

சட்டோகிராமில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா அணி, டோனி டி ஷார்சி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரின் அபாரமான சதத்தால் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை குவித்துள்ளது.

Tony de Zorzi

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமாக விளையாடி 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து முதல் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். டோனி டியை பொறுத்தவரையில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 141 ரன்களுடன் விளையாடிவருகிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை என்று தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.