நடப்பு உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளை பதிவுசெய்த நியூசிலாந்து அணி, புள்ளிப்பட்டியலில் 4-0 என ஆதிக்கம் செலுத்தி முதலிடம் வகித்தது. தோல்வியே பெறாமல் இருந்துவந்த அணியை தோல்வியின் பக்கம் திருப்பிவிட்ட இந்திய அணி, ஒரு மோசமான பள்ளத்திற்குள் நியூசிலாந்தை தள்ளியுள்ளது. இந்தியாவுடன் தோற்ற நியூசிலாந்து அணி, அதற்கு அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் கடைசிபந்துவரை சென்று 5 ரன்னில் தோல்வியை தழுவியது.
அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 2 இடம் கிழிறங்கி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது நியூசிலாந்து. இந்நிலையில் அரையிறுதியை உறுதிசெய்யும் முக்கியமான போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்த்து களம்கண்டது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் லாதம் முதலில் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரென்ட் போல்ட் மிரட்டிவிட்டார். போல்ட்டுக்கு எதிராக விக்கெட் கீப்பர் டிகாக் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய கேப்டன் டெம்பா பவுமா சிக்சர், பவுண்டரிகளாக விரட்டி மிரட்டிவிட்டார். அடுத்தடுத்து 4 பவுண்டரிகள்,1 சிக்சர் என விளாசி கெத்துகாட்டிய பவுமாவை 24 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை விரைவாகவே எடுத்துவந்தார் போல்ட். 38 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் அடுத்து கைக்கோர்த்த டிகாக் மற்றும் வான் டர் டஸ்ஸென் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் தரமான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி, அனைத்து நியூசிலாந்து பவுலர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளையாடியது. ஒருபக்கம் டிகாக் பொறுப்பான ஆட்டத்தை ஆட, மறுபுறம் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட க்ளாசன் கலக்கினார். அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்த இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. 40 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய டிகாக் மற்றும் டஸ்ஸென் இருவரும் தங்களுடைய உலகக்கோப்பை சதங்களை இந்த போட்டியிலும் எடுத்துவந்தனர்.
இந்த உலகக்கோப்பையில் தனது 4வது சதத்தை பதிவுசெய்த டிகாக் 114 ரன்களில் வெளியேற, 2வது சதத்தை எடுத்துவந்த டஸ்ஸென் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் பறக்கவிட்டு 133 ரன்களில் வெளியேறினார். கடைசியாக களத்திற்கு வந்த டேவிட் மில்லர் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 30 பந்தில் 53 ரன்கள் அடிக்க, சிறப்பான பேட்டிங் காட்சியை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 357 ரன்களை குவித்தது.
358 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவின் அபாரமான பந்துவீச்சுக்கு அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 35 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தோல்வி கிட்டதட்ட நிச்சயமான நிலையில் பிலிப்ஸ் அரைசதம் விளாசி களத்தில் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க வீரர்கள் பல புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர். அந்த சாதனைகளை பார்ப்போம்..
1. ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள்:
நடப்பு உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் மட்டும் விளையாடியிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, ஒரு உலகக்கோப்பை பதிப்பில் அதிக சிக்சர்கள் அடித்த அணியாக புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை 82 சிக்சர்களை பதிவுசெய்திருக்கும் தென்னாப்பிரிக்கா, இதற்கு முன்பு 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அடித்திருந்த 76 சிக்சர்கள் என்ற சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா பைனல் வரை விளையாடினால் 100 சிக்சர்களை கடந்து வரலாற்று சாதனையை படைக்கும்.
2. 8 முறை தொடர்ச்சியாக 300+ டோட்டல்!
கடந்த 2019 உலகக்கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்திருந்த தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களுக்கு மேல் அடித்திருந்தது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியில் 6 முறை முதலில் பேட்டிங் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா, தொடர்ச்சியாக 6 முறையும் 300 ரன்களுக்கு மேல் அடித்து 8 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக சாதனை படைத்துள்ளது.
3. 350 ரன்களுக்கு மேல் 9 முறை:
நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் 4 முறை 350 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் தென்னாப்பிரிக்கா, உலகக்கோப்பையில் அதிகமுறை 350 ரன்களுக்கு மேல் பதிவுசெய்திருக்கும் அணியாக உருவெடுத்துள்ளது. உலகக்கோப்பையில் 9 முறை 350 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
4. ஒரு உலகக்கோப்பையில் 4 சதமடித்த டிகாக்:
ஒரு உலகக்கோப்பை பதிப்பில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4 சதங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் குயிண்டன் டிகாக். நடப்பு உலகக்கோப்பையில் அடுத்தடுத்து 4 சதங்களை அடித்திருக்கும் டிகாக்கிற்கு, ரோகித் சர்மாவின் 5 சதங்களை அடிக்க இன்னும் ஒரு சதம் மட்டுமே மீதமுள்ளது.
5. அதிக சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர்:
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 22 சிக்சர்களை அடித்திருக்கும் விக்கெட் கீப்பர் டிகாக், 19 சிக்சர்கள் அடித்திருந்த ஆடம் கில்கிறிஸ்டை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.
6. அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்:
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 சதங்களுடன் 545 ரன்களை குவித்திருக்கும் குயிண்டன் டிகாக், ஒரு உலகக்கோப்பை பதிப்பில் அதிக ரன்கள் அடித்த குமார் சங்ககரா (541 ரன்கள்) சாதனையை முறியடித்துள்ளார். 2015 உலகக்கோப்பையில் இந்த சாதனையை சங்ககரா படைத்திருந்தார்.
7. நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்:
23 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்துள்ளது தென்னாப்ரிக்கா அணி. இதற்கு முன் 2000-ல் அடித்திருந்த 324 ரன்களே நியூசிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ரன்களாக இருந்தன.
8. உலகக்கோப்பையில் ஒரு அணியாக அதிக சதங்கள்:
டிகாக், டஸ்ஸென், மார்க்ரம், க்ளாசன் என நான்கு தென்னாப்ரிக்க வீரர்கள் 8 சதங்களை பதிவுசெய்திருக்கும் நிலையில், ஒரு உலகக்கோப்பை பதிப்பில் அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்களை பதிவுசெய்துள்ளது தென்னாப்ரிக்கா அணி. இச்சாதனையில் 2015 இலங்கை அணியோடு இணைந்துள்ளது தென்னாப்பிரிக்கா.
9. உலகக்கோப்பையில் ஒரு அணியாக அதிக அரைசதங்கள்:
நடப்பு உலகக்கோப்பையில் 15 முறை அரைசதங்களை பதிவுசெய்திருக்கும் தென்னாப்ரிக்கா அணி, நடப்பு உலகக்கோப்பையில் அதிக அரைசதங்கள் அடித்த அணியாக மாறியுள்ளது.
10. நியூசிலாந்துக்கு எதிராக முதல்முறையாக 200 ரன்கள்:
நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் டிகாக் மற்றும் டஸ்ஸென் இருவரும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். இந்நிலையில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக 200 ரன்கள் பாட்னர்ஷிப்பை பதிவுசெய்து அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி. எந்தவொரு விக்கெட்டுக்கும் அடிக்கப்பட்ட அதிகரன்கள் பார்ட்னர்ஷிப் இதுவாகும்.