Steve Stolk Disney+ Hotstar
கிரிக்கெட்

6-6-6-6-4-6! ஒரே ஓவரில் 34 ரன்கள்! 13 பந்தில் அரைசதம் அடித்து 17வயது தென்னாப்பிரிக்க வீரர் சாதனை!

யு19 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அரை சதமடித்து 17வயது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோக் சாதனை படைத்துள்ளார்.

Rishan Vengai

ஐசிசி19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை 2024 தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சிமுறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு பிரிவில் இருக்கும் 4 அணிகளில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் மோதி, புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்க வேண்டும்.

A பிரிவில் இந்தியா, C பிரிவில் ஆஸ்திரேலியா, D பிரிவில் பாகிஸ்தான் முதலிய அணிகள் முதல் இடங்களை பிடித்த நிலையில், B பிரிவில் முதலிரண்டு இடங்களை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்தன. எனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி.

27 ஓவரில் 273 ரன்கள் அடித்து அபார வெற்றி!

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர் ஜேமி டங் மற்றும் கேப்டன் ஓவென் இருவரும் 90 மற்றும் 97 ரன்கள் அடிக்க, ஸ்காட்லாந்து அணி 50 ஒவர் முடிவில் 269 ரன்கள் சேர்த்தது. ஒரு நல்ல ஸ்கோரை ஸ்காட்லாந்து எட்டியநிலையில் தென்னாப்பிரிக்காவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பறிபோனதாகவே நினைக்கத்தோன்றியது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்டோக் வேறொரு திட்டத்தில் இருந்தார்.

Steve Stolk

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ், காசிம் கான் வீசிய 3வது ஓவரில் சிக்சர் வேட்டை நடத்தினார். 3வது ஓவரில் மட்டும் 5 சிக்சர்கள், 1 பவுண்டரி என பறக்கவிட்ட அவர் 13 பந்துகளில் 50 ரன்களை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத அவர், 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உட்பட 86 ரன்கள் குவித்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய டெவான் மரைஸ் மற்றும் டேவிட் டீஜெர் இருவரும் ஸ்டீவ் ஸ்டோக் விட்ட இடத்திலிருந்து அதிரடியை தொடர்ந்தனர். டெவான் மற்றும் டேவிட் இருவரும் 80 ரன்கள், 43 ரன்கள் என அடித்து துவம்சம் செய்ய, தென்னாப்பிரிக்காவின் இந்த இளம் அணி வெறும் 27 ஓவர்களிலேயே 10 ரன்ரேட்டில் 273 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் சம புள்ளிகளில் இருந்த இங்கிலாந்தை ரன்ரேட் மூலம் பின்னுக்கு தள்ளி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

13 பந்தில் அரைசதமடித்து சாதனை!

காசிம் கானுக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 34 ரன்கள் அடித்த ஸ்டீவ் ஸ்டோக், 13 பந்துகளில் அரைசதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். யு19 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைவான பந்துகளில் அரைசதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, 17 வயதான தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோக் படைத்துள்ளார்.

இந்த சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் மீதமிருக்கும் 12 அணிகளில் A பிரிவில் இருக்கும் அணிகள் D பிரிவில் இருக்கும் அணிகளுடனும், B பிரிவில் இருக்கும் அணிகள் C பிரிவில் இருக்கும் அணிகளுடனும் மோதி அரையிறுதிக்கு தகுதிபெற்று விளையாடும்.