Shafali Verma | Sneh Rana -
கிரிக்கெட்

10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்னே ராணா... தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டை வென்ற இந்தியா!

Viyan

தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் இந்திய ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா. இந்த அட்டகாச பந்துவீச்சுக்காக பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதும் வென்றார் அவர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் பெங்களூருவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வைட்வாஷ் செய்தது ஹர்மன்ப்ரீத் கௌரின் அணி. அடுத்ததாக ஒரேயொரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனைகளாக இறங்கிய ஸ்மிரிதி மந்தனா, ஷெஃபாலி வெர்மா இருவரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். சரமாரியாக பௌண்டரிகள் அடித்த இருவருமே சதமடித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 51.6 ஓவர்களில் 292 ரன்கள் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா 149 ரன்களில் அவுட்டாக, ஷெஃபாலி வெர்மா இரட்டைச் சதமடித்து அசத்தினார். அவர் 197 பந்துகளில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய ஜெமீமா ராட்ரிகியூஸ், ஹர்மன்ப்ரீத் கௌர், ரிச்சா கோஷ் அனைவரும் அரைசதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 603/6 என்ற இமாலய இலக்கை பதிவு செய்து டிக்ளேர் செய்தது இந்தியா. பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் ஓரளவு தாக்குப்பிடித்தது. இருந்தாலும் அவர்களால் இந்தியாவைப் போல் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. சுனே லூஸ் 65 ரன்களும், மரிசான் காப் 74 ரன்களும் எடுத்தனர். வேறு யாரும் அரைசதம் கூடக் கடக்கவில்லை. அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் எல்லோரும் ஸ்னே ராணாவின் ஆஃப் ஸ்பின்னுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்கள். 25.3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 77 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் ராணா. இந்தியாவின் நீது டேவிட், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் மற்ற இருவர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் பின்தங்கிய தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் நிதானமாக ஆடியது தென்னாப்பிரிக்க அணி. முதல் விக்கெட் சீக்கிரம் விழுந்திருந்தாலும் கேப்டன் லாரா வோல்வார்ட், சுனே லூஸ் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு அசத்தலாக ஆடியது. இந்திய பௌலர்களை கேப்டன் ஹர்மன் மாற்றி மாற்றிப் பாற்றும் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. அவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர். 109 ரன்கள் எடுத்திருந்த லூஸ், ஹர்மன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. வோல்வார்ட் 122 ரன்களும், நடீன் டி கிளார்க் 61 ரன்களும் எடுத்து போராடினார்கள். ஆனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்னிங்ஸை தோல்வியைத் தவிர்த்திருந்தாலும், அந்த அணி 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஸ்னே ராணா

இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, ஸ்னே ராணா, ராஜேஷ்வரி கெயக்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம், இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் ஸ்னே ராணா. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது இந்திய பௌலர் இவர். இதற்கு முன் ஜூலன் கோஸ்வாமி ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தன் இரண்டாவது டெஸ்ட்டில் ஆடும் சுபா சதீஷுக்கு பேட்டிங் வாய்ப்பு கொடுத்து அவரை ஓப்பனராக இறக்கியது இந்திய அணி. அவரும் ஷெஃபாலியும் விக்கெட் எதுவும் கொடுக்காமல் இந்தியாவுக்கு போட்டியை வென்று கொடுத்தனர்.

கடைசியாக இந்த ஒரு ஆண்டு காலத்தில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது இந்திய அணி. கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியிருந்தது ஹர்மன் அண்ட் கோ.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்தத் தொடர் ஜூலை 5ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.