இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
முதல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதற்கு பிறகு இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுத்த நியூசிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
1-1 என தொடர் சமன்செய்யப்பட்ட நிலையில் தொடரை வெல்வதற்கு மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூசிலாந்தின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து.
ஆனால் ஒருபுறம் நிலைத்து நின்று ப்ரூக் ஹல்லிடே 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் அடித்து அசத்த, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் சேர்தது நியூசிலாந்து.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி ஸ்மிரிதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 122 பந்துகளில் 10 பவுண்டரிகளை விரட்டிய ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது சதமடித்து அசத்தினார்.
ஸ்மிரிதி மந்தனா 100, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 59 என அடித்து அசத்த 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த ஸ்மிரிதி மந்தனா, இந்திய அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த மிதாலி ராஜ் சாதனையை முறியடித்தார்.
மிதாலி ராஜ் 7 ஒருநாள் சதங்களை அடித்திருந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா 8 ஒருநாள் சதங்களை அடித்து அதிக சதங்கள் அடித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவிற்கு அதிக ODI சதங்கள்:
* ஸ்மிரிதி மந்தனா - 88 போட்டிகள் - 8 சதங்கள்
* மிதாலி ராஜ் - 232 போட்டிகள் - 7 சதங்கள்
* ஹர்மன்ப்ரீத் - 135 போட்டிகள் - 6 சதங்கள்