Kusal Mendis PTI
கிரிக்கெட்

SLvNED | முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா இலங்கை..?

குஷல் மெண்டிஸ்: வேறு யார் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்கள்?

Viyan
போட்டி 19: நெதர்லாந்து vs இலங்கை
மைதானம்: ஏகான ஸ்டேடியம், லக்னோ
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 21, காலை 10.30 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

நெதர்லாந்து
போட்டிகள் - 3, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: எட்டாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ஸ்காட் எட்வர்ட்ஸ் - 108 ரன்கள்
சிறந்த பௌலர்: பாஸ் டி லீட் - 7 விக்கெட்டுகள்
இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தான் செய்திருக்கிறது. முதலிரு போட்டிகளிலும் (vs பாகிஸ்தான் & நியூசிலாந்து) தோல்வியை சந்தித்திருந்தாலும், மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி பெரும் ஷாக் கொடுத்திருக்கிறது ஆரஞ்ச் ஆர்மி.

இலங்கை
போட்டிகள் - 3, வெற்றி - 0, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 0
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: குசல் மெண்டிஸ் - 207 ரன்கள்
சிறந்த பௌலர்: தில்ஷன் மதுஷன்கா - 7 விக்கெட்டுகள்
இலங்கை அணி இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக்கொண்டிருக்கிறது. இத்தொடரின் 10 அணிகளுள் வெற்றியே பெறாத அணி இலங்கை மட்டும் தான். முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பந்துவீசியவர்கள், உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோரை எடுக்கவிட்டார்கள். அடுத்த போட்டியில் பாகிஸ்தானை உலகக் கோப்பையின் பெரிய சேஸிங்கை செய்யவிட்டார்கள். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு முதல் வெற்றியைப் பரிசளித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

நெதர்லாந்து பேட்டிங் எழுச்சிபெறவேண்டும்!

Netherlands team

நெதர்லாந்து அணி யாரும் எதிர்பாராத விதமாக அசத்தல் ஃபார்மில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் பெற்றிருக்கும் மறக்க முடியாத இந்த வெற்றி, அந்த அணிக்கு அசுரத்தனமான நம்பிக்கை கொடுக்கும். பாஸ் டி லீட், வேன் டெர் மெர்வ், பால் வேன் மீக்ரன் என அந்த அணியின் முன்னணி பௌலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அந்த அணியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவர்களின் டாப் ஆர்டரில் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கடந்த போட்டியில் கூட கடைசி கட்டத்தில் டெய்ல் எண்டர்கள் வேன் டெர் மெர்வ், ஆர்யன் தத் போன்றவர்கள் அடித்ததால் தான் பெரிய ஸ்கோர் வந்தது. 3 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டுமே 100 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். மற்ற வீரர்கள் எழுச்சி கண்டால் மட்டுமே நெதர்லாந்து அணி அவர்களின் வெற்றிப் பயணத்தைத் தொடர முடியும். குறிப்பாக அவர்களின் ஓப்பனர்களான மேக்ஸ் ஓ'தௌத் மற்றும் விக்ரம்ஜித் சிங் இருவரும் இணைந்து ஒரு முறையாவது நல்ல தொடக்கம் கொடுக்கவேண்டும். முதல் வெற்றிக்காகப் போராடும் இலங்கையை விட வேறு எந்த அணி அமைந்துவிட முடியும் இவர்களின் இரண்டாவது வெற்றியைக் குறிவைக்க!

முதல் வெற்றி வாய்க்குமா?

Sri lanka

இலங்கை அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்ற பெரிய அணிகளுக்கு எதிராகத்தான் அந்தத் தோல்விகள் வந்திருக்கின்றன என்றாலும், இன்னும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் காத்திருக்கின்றன என்பதை யோசித்தால், அவர்களின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. பேட்டிங், பௌலிங் இரண்டுமே அந்த அணிக்கு கைகொடுக்க மறுக்கிறது. குஷல் மெண்டிஸ் பேட்டோடு போராடினால், தில்ஷன் மதுஷன்கா பந்தோடு போராடுகிறார். மற்ற வீரர்கள் எல்லோரும் கைகொடுக்க மறுக்கிறார்கள். ஒரு அணியாக இலங்கை ஆடவேண்டிய தருணம் இது.

மைதானம் எப்படி?

ஏகானா மைதானத்தில் நடக்கும் மூன்றாவது உலகக் கோப்பை போட்டி இது. முந்தைய இரு போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணியும் வென்றிருக்கிறது, சேஸிங் செய்த அணியும் வென்றிருக்கிறது. அதிக புற்கள் இருக்கும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

நெதர்லாந்து - பாஸ் டி லீட்: அந்த அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஒரு சூப்பர் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தால் அடுத்தடுத்த வெற்றிகளை அந்த அணி பதிவு செய்யலாம். பந்துவீச்சில் அசத்துபவர், பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கைகொடுக்கவேண்டும்.

Kusal Mendis



இலங்கை - குஷல் மெண்டிஸ்: வேறு யார் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்கள்?