Sri Lanka players PTI
கிரிக்கெட்

SLvAFG | மூன்றாவது வெற்றியைக் குறிவைக்கும் ஆப்கானிஸ்தான் & இலங்கை..!

Viyan
போட்டி 30: ஆப்கானிஸ்தான் vs இலங்கை
மைதானம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 30, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆப்கானிஸ்தான்
போட்டிகள் - 5, வெற்றிகள் - 2, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 224 ரன்கள்
சிறந்த பௌலர்: ரஷீத் கான் - 6 விக்கெட்டுகள்
மோசமாகத் தொடங்கிய உலகக் கோப்பையை சிறப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான். முதலிரு போட்டிகளிலும் தோற்றவர்கள் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அப்செட்டை அரங்கேற்றினார்கள். அந்த ஃபார்ம் தொடரும் என்று நினைத்திருந்த நிலையில், நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தார்கள். அதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது அப்செட்டை நிகழ்த்தினார்கள். அந்த வெற்றி சேஸிங்கில் வந்திருக்கிறது என்பதுதான் இன்னும் சிறப்பு.

இலங்கை
போட்டிகள் - 5, வெற்றிகள் - 2, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஐந்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: சதீரா சமரவிக்ரமா - 295 ரன்கள்
சிறந்த பௌலர்: தில்ஷன் மதுஷன்கா - 11 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என மூன்று அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்து மோசமாக உலகக் கோப்பையை தொடங்கியிருந்த இலங்கை அணி, நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. நெதர்லாந்தை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியவர்கள், கடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்கள். இதுவரை சேஸ் செய்த 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றிருக்கிறது இலங்கை அணி.

மைதானம் எப்படி இருக்கும்?

இந்த உலகக் கோப்பையில் புனேவில் இதற்கு முன் ஒரு போட்டி நடந்தது. அதில் இந்திய அணி சேஸிங் செய்து வங்கதேசத்தை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் மைதானம் ஸ்பின்னர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்பு தந்தது. 10 ஓவர்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஜடேஜா. இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஜும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் இந்தப் போட்டியில் புனே ஆடுகளம் இருந்தால், நிச்சயம் இரு அணியின் ஸ்பின்னர்களும் விக்கெட் வேட்டை நடத்த காத்திருப்பார்கள். ஆனால் 4 ஸ்பின்னர்களோடு கடந்த போட்டியில் கலக்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அது இன்னும் சாதகமாக அமையும்.

இன்னொரு அப்செட்டை அரங்கேற்றுமா ஆப்கானிஸ்தான்

நியாயப்படி பார்த்தால் இனி ஆப்கானிஸ்தானின் வெற்றியை அப்செட் என்று சொல்லவே கூடாது. அந்த அளவுக்கு சிறப்பான செயல்பாட்டை அனைத்து துறைகளிலுமே வெளிப்படுத்திவருகிறது அந்த அணி. அவர்கள் பௌலர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட்டார்களோ இல்லையோ, அவர்கள் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த போட்டி வரை ஓப்பனர்கள் குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல இன்னிங்ஸ் ஆடி அணியை வெற்றி பெறவும் வைத்தனர். அது தடுமாறும் அந்த அணியின் மிடில் ஆர்டருக்கு பூஸ்ட்டாக அமையும். அந்த பேட்டிங் ஆர்டர் போல் ஆப்கானிஸ்தானின் ஸ்பின்னர்கள் எழுச்சி கண்டால் நிச்சயம் இலங்கையை வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. புனே ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருப்பதுபோல் இருந்தால், கடந்த போட்டியைப் போல் ஆப்கானிஸ்தான் ஒரு கூடுதல் ஸ்பின்னருடனேயே களமிறங்கும்.

மேலும் மேலும் காயங்களால் அவதிப்படும் இலங்கை

இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றிகள் பெற்றுவரும் நிலையில், தொடர் காயங்கள் அந்த அணியை வாட்டிக்கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை தொடங்கிய பின்பே இரு வீரர்களை இழந்திருந்த அந்த அணி, இப்போது மூன்றாவதாக லஹிரு குமாராவையும் காயத்தால் இழந்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் குமாரா தான் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். அவருக்குப் பதிலாக துஷமன்தா சமீரா ஸ்குவாடில் இணைந்திருக்கிறார். ஆடுகளத்தின் தன்மை கருதி பிளேயிங் லெவனில் அவரது இடத்தை வெல்லாலகே வைத்து இலங்கை அணி நிரப்பலாம். அவர்கள் வேகப்பந்துவீச்சு ஓரளவு முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அந்த அணியின் பேட்டிங் இலங்கைக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஓப்பனர் பதும் நிசன்கா தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்திருக்கிறார். சமரவிக்ரமா 1 சதமும், 2 அரைசதங்களும் அடித்திருக்கிறார். முதலிரு போட்டிகளில் நன்றாக ஆடிய குஷல் மெண்டிஸ் ஃபார்முக்கு வந்தால் நிச்சயம் இலங்கை அணி பெரிய ஸ்கோரை எட்டும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்: ஒரு உலகத் தர வீரரிடமிருந்து உலகக் கோப்பையில் ஒரு மாஸ் பெர்ஃபாமன்ஸ் வந்தே ஆகவேண்டும். இந்த மைதானம், இந்த எதிரணி இலங்கைக்கு ஏற்றதாக இருக்கிறது.

இலங்கை - பதும் நிசன்கா: தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார் நிசன்கா. பவர்பிளேவில் முஜீப் உர் ரஹ்மானை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.