Siraj pt
கிரிக்கெட்

"நம்பர் 1 வீரராக இருப்பதை விட உலகக்கோப்பை வெல்வது தான் எனது குறிக்கோள்!" - முகமது சிராஜ்

உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஐசிசி தரவரிசையில் ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Rishan Vengai

கிரிக்கெட் உலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி வீரர்கள், ஐசிசியின் உலக தரவரிசைப்பட்டியலிலும் முதலிடங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக சுப்மன் கில்லும், நம்பர் 1 பவுலராக முகமது சிராஜும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்டராக சூர்யகுமார் யாதவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக ரவிச்சந்திரன் அஸிவினும், நம்பர் 1 ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

நம்பர் 1 வீரராக இருப்பதை விட உலகக்கோப்பை தான் முக்கியம்!

நம்பர் 1 வீரராக மாறியதை குறித்து ஐசிசி வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் முகமது சிராஜ், “ உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் இதற்கு முன்பும் சில காலம் நம்பர் 1 வீரராக இருந்தேன். அதன் பிறகு நானும் தரவரிசையில் ஏறி இறங்கினேன். அதனால் இந்த எண்கள் எனக்கு முக்கியமில்லை. இப்போதைய எனது குறிக்கோள் ஒன்றே ஒன்று தான், அது உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவவேண்டும். இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பை வெல்ல உதவுவேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

siraj

மேலும், “ அனைத்து வீரர்களும் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்துவருகின்றனர். இந்த அணியில் இடம்பெற்றிருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இனிவரும் முக்கியமான போட்டிகளிலும் இதே போன்று ஒரே அணியாக செயல்பட்டு கோப்பையை வெல்வோம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களுடைய பவுலிங் யூனிட் சிறப்பாக இருக்கிறது, இந்த பவுலிங் யூனிட்டில் இருப்பது அதிக மகிழ்ச்சியை தருகிறது” என பேசியுள்ளார்.