virat pt web
கிரிக்கெட்

“உங்கள் அணியை அவர் துண்டாடுகிறார்.. ஆனா நீங்களோ..” - நியூசி வீரர்களை விமர்சித்த முன்னாள் ஆஸி. வீரர்

விராட் கோலிக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பின் போது அவருக்கு உதவ முன்வந்ததற்கு நியூசி வீரர்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் விமர்சனம் செய்துள்ளார்.

Angeshwar G

உலகக்கோப்பைத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 397 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்களைக் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடக்கம். நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 70 பந்துகளில் 105 ரன்களைக் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடக்கம்.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்களை மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் முகம்மது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் போது 91 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலிக்கு திடீரென தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அப்போது நியூசிலாந்து வீரர்கள் சிலர் அவருக்கு உதவ முன்வந்தனர். இதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் ஓ டோனெல் (Simon O'Donnell) விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணி 400 ரன்களை நோக்கி ஆடிக்கொண்டிருந்த போது விராட் கோலிக்கு தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. நியூசிலாந்து வீரர்கள் சென்று அவருக்கு உதவுகிறார்கள். உலகக்கோப்பை அரையிறுதியில் ஏன் சென்று உதவ வேண்டும்? நேர்மறையான ஆட்டம் என்பது விதிகளுக்கு உட்பட்டு விளையாடுவதுதான். விராட் உங்கள் நாட்டை துண்டாடுகிறார். நீங்கள் அவருக்கு கைகொடுக்க விரும்புகிறீர்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.

“ஜெண்டில்மேன் கேமில், உடல் சார்ந்து அவதியுறும் ஒருவரை கண்டு ஒதுங்குவது எப்படி சரியென நினைக்கிறீர்கள்” என அவருக்கும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.