பாகிஸ்தான் web
கிரிக்கெட்

“நீங்கள் பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும்..”! PAK ரசிகரின் கேள்விக்கு நட்சத்திர வீரரின் தரமான பதில்!

Rishan Vengai

நவீனகால கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசாவுக்கு தனியிடம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பாகிஸ்தானில் பிறந்தவரான சிக்கந்தர் ராசா, ஜிம்பாப்வே அணிக்காக தன்னுடைய அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.

2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து, 17 டெஸ்ட் போட்டிகள், 142 ஒடிஐ போட்டிகள் மற்றும் 91 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் சிக்கந்தர் ராசா பல மறக்கமுடியாத ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Sikandar Raza

சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா, இந்தியாவிற்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றிக்கு ஜிம்பாப்வே அணியை வழிநடத்தினார். தற்போது ஐசிசியின் உலகத்தரவரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 3வது இடமும், டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாவது இடமும் பிடித்திருக்கும் சிக்கந்தர் ராசா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரிடமிருந்து ஒரு வினோதமான கேள்வியை சந்தித்தார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட சிக்கந்தர் ராசாவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அழைத்த அந்த ரசிகர், அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்னைகளை உங்களால் சரிசெய்ய முடியும் என்ற கோரிக்கையை வைத்தார்.

பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடுங்கள்..

எக்ஸ் தளத்தில் சிக்கந்தர் ராசாவிடம் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், “பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பாகிஸ்தான் அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னைகளை தீர்க்க உங்களால் உதவமுடியும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த சிக்கந்தர் ராசா, “நான் பிறந்தது பாகிஸ்தானில், ஆனால் என்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கியது ஜிம்பாப்வேதான். நான் எப்போதும் ஜிம்பாப்வேயை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன், ஜிம்பாப்வே என்மீது நம்பிக்கை வைத்து அதிகப்படியான நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுள்ளது. அதற்காக அவர்களின் நம்பிக்கையை திருப்பித்தர நான் முயற்சிக்கிறேன். நான் எதைச்சாதித்தாலும் அவர்கள் எனக்கு கொடுத்ததை என்னால் திருப்பிக் கொடுக்க முடியாது. ஜிம்பாப்வே என்னுடையது மற்றும் நான் மொத்தமும் ஜிம்பாப்வேவுக்கு உரியவன்” என்று பதிலளித்துள்ளார்.

அவரின் இந்த பதிலுக்கு பல்வேறு ரசிகர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.