உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை துரத்தும் முனைப்பில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சுப்மன் கில் 18 ரன்களில் இருந்தபோது ஸ்காட் போலண்ட் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்லிப் திசையில் நின்ற கேமரூன் கிரீன் கைக்கு சென்றது.
கேமரூன் கிரீன் கேட்ச் பிடிக்கும்போது பந்து மைதானத்தில் படுவதுபோல் தெரிந்ததால் கள நடுவர்கள் 3-வது நடுவரின் முடிவுக்கு சென்றனர். அப்போது ரீப்ளேவில் கேமரூன் கிரீன் பந்தை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதுபோல் தெளிவாக தெரிந்த போதிலும், மூன்றாம் நடுவர் சுப்மன் கில் அவுட் ஆகிவிட்டதாக அறிவித்தார். இதனால் சுப்மன் கில் தேவையே இல்லாமல் விக்கெட்டை இழக்கும் நிலை ஏற்பட்டது. நாட் அவுட்டை அவுட் என நடுவர் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நடுவரின் முடிவு தவறானது எனக் கூறி ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் சுப்மன் கில்லிற்கு முடிவு எடுக்கும் போது மூன்றாவது நடுவர் கண்ணைக் கட்டிக் கொண்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார். மேலும், உறுதியில்லை, சந்தேகம் இருந்தால் அது நாட் அவுட் தான் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்துள்ளது. களத்தில் விராட் கோலியும் (44 ரன்கள்), ரஹானேவும் (20 ரன்கள்) உள்ளனர்.
அதேபோல், சுப்மன் கில்லும் அந்த அவுட்டை குறிப்பிடும் வகையில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கண்ணாடி லென்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்கள் தேவையாக உள்ளது. 7 விக்கெட்டுகள் இன்னும் கைசவம் உள்ளது. இந்த இலக்கை எட்டிவிட்டால் இது மிகப்பெரிய சாதனையாகவே இருக்கும்.