சுப்மன் கில், விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

”விராட் காட்டுப்பசியுடன் இருப்பது ஆச்சர்யம்” - கோலியின் சாதனை குறித்து சுப்மன் கில்

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பின், வான்கடே மைதானத்தின் உடை மாற்றும் அறையில் இந்திய அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழும் காட்சிப்பதிவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

Prakash J

மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா பெரும் போராட்டத்திற்கு இடையில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து உடை மாற்றும் அறைக்கு சென்ற வீரர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்ந்தனர். கேஎல்.ராகுல் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், ’இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டோம்’ என சூர்யகுமார் யாதவ் கையை உயர்த்திக்காட்டினார்.

பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை விராட் கோலி கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். பயிற்சியாளர் டிராவிட், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோருக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தார். முகமது ஷமியின் கைகளைப் பற்றி முத்தமிட்டு பாராட்டினார் அஷ்வின். இந்திய அணியில் இடம்பெறாத யுஸ்வேந்தர சாகலும் தனது சகாக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

இதையும் படிக்க: ”தவறுதலாக நடந்துவிட்டது... மன்னித்துவிடுங்கள்” - இளைஞரை அடித்த விவகாரத்தில் நானா படேகர் மன்னிப்பு!

இந்த நிலையில், விராட் கோலி குறித்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “கோலிக்கு அவரது விளையாட்டு தெரியும். தயாராவதற்கு மட்டுமே நாங்கள் உதவுவோம். அவர், எதைப் பற்றியாவது தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களிடம் வந்து கேட்பார். மற்றபடி பயிற்சியாளர்களின் உதவி தேவைப்படாது. இப்போது கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என அவருக்குத் தெளிவாக தெரியும், அதற்கு சரியான மனநிலையில் அவர் இருக்க வேண்டும். நல்ல மனநிலையில் இருக்கும்போது பேட் அவர் சொல்வதைக் கேட்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோலி குறித்து சுப்மன் கில், “ஒவ்வொரு முறையும் விராட் கோலி களமிறங்கும்போதும் ஏதாவது ஒன்றை ஸ்பெஷலாக நிகழ்த்தி வருகிறார். அதுவும் 10 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக விராட் கோலி சிறப்பாக ஆடி சாதனைகள் படைப்பது எங்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. அவரின் திறமையை காட்டிலும், ரன்கள் சேர்க்க வேண்டும் என்று காட்டுப்பசியுடன் விராட் கோலி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ’தேடும் கண் பார்வை தவிக்க.. துடிக்க..’- சந்தோஷத்தில் அனுஷ்காவை தேடிய விராட் கோலி.. வைரல் வீடியோ!