2024-2025 ரஞ்சிக்கோப்பை போட்டிகளானது கடந்த அக்டோபர் 11 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எலைட் பட்டியலில் இருக்கும் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொண்டு விளையாடி வருகின்றன. இதில், இந்தியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில், 164 பந்துகளில் 152 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஒடிசா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இளம்வீரர் ரகுவன்சி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசிய ரகுவன்சி சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 92 ரன்னில் வெளியேறினார்.
அடுத்துவந்து கேப்டன் ரஹானே 0 ரன்னில் வெளியேற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சித்தேஷ் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சித்தேஷ் நிலைத்துநின்று விளையாட மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
18 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என அசத்திய ஸ்ரேயாஸ் 164 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். மறுமுனையில் 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து நிலைத்து நின்ற சித்தேஷ் சதமடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் ஸ்ரேயாஸ் 152*, சித்தேஷ் 114* ரன்கள் அடித்து அவுட்டாகமல் இருக்க, மும்பை அணி 385/3 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பிவரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மஹாராஸ்டிரா மற்றும் ஒடிசா என இரண்டு அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் மீண்டும் அணியில் இணைக்கப்படுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.