கொல்கத்தா மருத்துவர் கொலை web
கிரிக்கெட்

Kolkata Doctor Murder | "காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.. நீதி வேண்டும்"- ஸ்ரேயாஸ், பும்ரா ஆதங்கம்!

கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

கொல்கத்தா நகரில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் பயிற்சி மருத்துவர் இரவுப் பணியில் இருந்தபோது, ​​கருத்தரங்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

justice for women

நாளுக்கு நாள் கொலை சார்ந்த விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் தங்களுடைய கண்டனத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக இருக்கத் தகுதியானவர்கள்! - பும்ரா

இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்த நட்சத்திர ஜஸ்பிரித் பும்ரா, ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக இருக்க தகுதியானவர்கள் என பதிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பும்ரா, "பெண்களை தங்கள் பாதையை மாற்றச் சொல்லாதீர்கள் - நிலப்பரப்பை மாற்றுங்கள். ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக இருக்கத் தகுதியானவர்கள்" என்று எழுதியிருந்தார்.

இது மட்டும் இன்னும் மாறவில்லை.. ஸ்ரேயாஸ் ஐயர் ஆதங்கம்!

இந்திய கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி விளையாட்டுத் துறையில் இருந்து முதலில் குரல் கொடுத்துள்ளார். இதயத்தை உடைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பேசியிருக்கும் அவர், மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாகவும், பெண்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்த சமூகத்தின் பார்வைகள் இன்னும் மாறவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையும் வேண்டுமென பேசியிருக்கும் அவர், “இத்தனை ஆண்டுகளில், எதுவும் மாறவில்லை. காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக நடந்திருக்கும் இச்சம்பவத்தில் பின்னர் நடந்தவை எல்லாம் பேரழிவிற்கு உட்பட்டது. குற்றவாளிகள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.