ஷோயப் அக்தர் web
கிரிக்கெட்

“பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும்..” - நேரலையில் பொறுமை இழந்த ஷோயப் அக்தர்!

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அக்டோபர் 7ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் ஆகா சல்மான் முதலிய 3 வீரர்கள் சதமடித்து அசத்த 556 ரன்களை குவித்தது பாகிஸ்தான்.

ஆகா சல்மான்

அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 262 ரன்கள் மற்றும் ஹாரி ப்ரூக் 317 ரன்கள் என குவித்து மிரட்ட இங்கிலாந்து அணி 823/7 என்ற இமாலய ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

ரூட் - ப்ரூக்

267 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி பாகிஸ்தான் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை குவித்தபிறகு தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானை சாடிய ஷோயப் அக்தர்..

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 448/6 ரன்களுக்கு டிக்ளர் செய்து படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக 500 ரன்களுக்கு மேல் குவித்து படுதோல்வியை சந்தித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமான விசயங்களை நிகழ்த்திவருகிறது.

அக்தர்

இந்நிலையில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாடு குறித்து பேசிய ஷோயப் அக்தர், “நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். ஒரு தசாப்தமாக நாங்கள் சரிவை கண்டுவருகிறோம். பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை ஏமாற்றமாக உள்ளது. தோற்றது பரவாயில்லை, ஆனால் விளையாட்டு நெருக்கமாக இருக்க வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாம் பார்த்தது, பாகிஸ்தான் வீரர்கள் முற்றிலும் நம்பிக்கையை விட்டுவிட்டனர். நாம் இதற்குமேல் வெல்லமாட்டோம் என்ற மனநிலையை அதுகாட்டுகிறது. இதன் காரணமாகவே இங்கிலாந்து 800+ ரன்களை எடுத்தது, வங்கதேசமும் உங்களை தோற்கடித்தது” என்று பிடிவி ஸ்போர்ட்ஸ் நேரடி விவாதத்தின் போது பொறுமையை இழந்து பேசினார்.

மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்ற ரசிகர்களின் ஆதங்கம் குறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டை நிறுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஐசிசி கூட ‘பாகிஸ்தானுக்கு அணிகளை அனுப்பி, அவர்களின் டெஸ்ட் அந்தஸ்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமா’ என நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இது மிகப்பெரிய மனவருத்தத்தை அளிக்கிறது. இந்த வீழ்ச்சி பாகிஸ்தான் கிரிக்கெட், ரசிகர்கள் மற்றும் வரவிருக்கும் திறமைகளை பாதிக்கப் போகிறது. இந்த குழப்பத்தை தீர்த்து வைக்க பிசிபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

shan masood

மேலும் கேப்டனை சாடியிருந்த அவர், “உங்கள் கேப்டன் சுயநலமாகவும், தேர்வுக்குழு பலவீனமாகவும் இருந்தால், அணியில் பிளவுகள் இருக்கத்தான் செய்யும். அதனால் உங்களுடைய ரிசல்ட்டும் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.