இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை குவாலியரில் தொடங்கவிருக்கும் நிலையில், இன்றைய அறிவிப்பாக ஷிவம் துபே அணியிலிருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிசிசிஐ அறிவித்திருக்கும் அறிவிப்பில், “ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். மூத்த தேர்வுக் குழு ஷிவம் துபேவுக்குப் பதிலாக திலக் வர்மாவை நியமித்துள்ளது. ஞாயிறு காலை குவாலியரில் திலக் இந்திய அணியுடன் இணைவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவம் துபே இல்லாதது இந்திய அணிக்கு பாதகம் தான் என்றாலும், திலக் வர்மா நல்ல ஃபார்மில் இருந்துவருகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் திலக் வர்மா இந்திய அணிக்கு நல்ல பங்களிப்பு வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல்லில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.
மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்.கீ), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா ( wk), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், திலக் வர்மா