ஷிகர் தவான் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

ஓய்வுக்குப் பிறகு புதிய பயணம்.. லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்த ஷிகர் தவான்!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நாட்களில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.

Prakash J

2010-ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, மிகச் சிறந்த இடதுகை பேட்டராகத் திகழ்ந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2,315 ரன்கள் அடித்துள்ளார்.

கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் 2018- ஆம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷிகர் தவான்

இதையடுத்து, இனிமேல் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்திய அவர், தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ஓய்வு குறித்து அவர், “ஒவ்வொரு கதையிலும் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நாம் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்குப் பக்கத்தைத் திருப்புவது அவசியமானது. அந்தவகையில் நான் என்னுடைய சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கிறேன்.

இந்த தருணத்தில் எனக்கு நானே ஆறுதலாக ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். அது என்னவெனில், ‘மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப்போவதில்லை என்று வருத்தப்பட வேண்டாம், நீ நாட்டிற்காக விளையாடியதில் மகிழ்ச்சிகொள்’. எனக்கு நானே இந்த ஆறுதலை சொல்லிக்கொள்கிறேன்” என மிக உருக்கமாக தெரிவித்திருந்தார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க: மொத்த கடனும் அடைப்பு.. ஷாக் ஆன ஆர்பிஐ.. பக்கா பிளான் போட்ட டாடா குழுமம்!

இந்த நிலையில், ஓய்வுபெற்ற சில தினங்களிலேயே கிரிக்கெட்டின் அடுத்த அத்தியாயத்தில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் தொடங்க இருக்கிறது.

லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான், “கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல்தகுதியுடன்தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான்

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இணை நிறுவனர் ராமன் ரஹேஜா, “ஷிகர் தவான் எங்களுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரது அனுபவமும் திறமையும் போட்டியை மேம்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்து செயல்பட்டால், இது லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களுக்கான 2வது இன்னிங்ஸ் என்ற எங்கள் நிலையை மேலும் மேம்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐசிசி சேர்மனாகும் ஜெய் ஷா? அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?