pakistan cricket web
கிரிக்கெட்

வரிசையாக 4 தோல்வி.. WTC புள்ளிப்பட்டியலில் 8வது இடம்! PAK கிரிக்கெட் வரலாற்றில் மோசமான கேப்டன்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பிறகு WTC புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான் அணி. வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்றபோட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சாத் ஷகீல் (141 ரன்கள்) மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (171* ரன்கள்) இருவரின் அபாரமான ஆட்டத்தால் 448 ரன்களை குவித்தது. போதுமான ரன்களை எடுத்துவிட்டதாக நினைத்த பாகிஸ்தான் கேப்டன் முன்னதாகவே டிக்ளர் செய்தார்.

rizwan

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்து விளையாடிய வங்கதேச அணி முஸ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் ஆட்டத்தின் உதவியால் 117 ரன்கள் முன்னிலையுடன் 565 ரன்கள் குவித்தது. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். மெஹிதி ஹாசன் 4 விக்கெட்டுகள் மற்றும் மூத்த ஸ்பின்னர் ஷாகிப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

pak vs ban

பின்னர் 30 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது. முதல்முறையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது மட்டுமில்லாமல், அதை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்து வங்கதேச அணி, பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.

WTC புள்ளிப்பட்டியலில் 8வது இடம்!

வங்கதேசத்துக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி, 30.56 வெற்றி சதவிகிதத்துடன் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. வங்கதேச அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 2023 உலகக்கோப்பை படுதோல்விக்கு பிறகு பாபர் அசாமிடமிருந்த கேப்டன்சி பொறுப்பானது ஷான் மசூத்திடம் கொடுக்கப்பட்டது. புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் ஷான் மசூத், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனாக முதல் 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய முதல் கேப்டன் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த ஜாவேத் புர்கி தன்னுடைய முதல் மூன்று கேப்டன்சி போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளில் சந்தித்திருந்தார். பாகிஸ்தான் அணி WTC இறுதிப்போட்டியில் விளையாடவேண்டும் என ஷான் மசூத் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஒரு மோசமான ரன்னப்பாக அவருடைய கேப்டன்சி அமைந்துள்ளது.