நடப்பு உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்-பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று 8-0 என முதலிடத்தில் நீடிக்கிறது. பேட்டிங்கில் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் கலக்கிவரும் நிலையில், பந்துவீச்சில் முகமது ஷமி, சிராஜ் மற்றும் பும்ரா மூன்று பேரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திவருகின்றனர்.
கடந்த உலகக்கோப்பை தொடர்களை விட நடப்பு உலகக்கோப்பை தொடரில் தரமான பந்துவீச்சு தாக்குதலை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 199 ரன்னிலும், பாகிஸ்தானை 191 ரன்னிலும், இங்கிலாந்தை 129 ரன்னிலும், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை 55 மற்றும் 83 ரன்களிலும் ஆல் அவுட் செய்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சு குறித்து பேசியிருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர், இந்திய அணி பந்துவீசும் போது பந்தை பரிசோதனை செய்யவேண்டும் என குற்றச்சாட்டினார்.
இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஷா, "அது எப்படி இந்திய பந்துவீச்சாளர்கள் வீசும்போது மட்டும் அதிக ஸ்விங் மற்றும் சீம் ஆகும், மற்ற பவுலர்கள் வீசும்போது எதுவும் ஆவதில்லை? என கேள்வி எழுப்பியதோடு பிசிசிஐ இந்திய பவுலர்களுக்கு மட்டும் வேறு பந்துகளை வழங்குவதாக" குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, டிஆர்எஸ் அழைப்பில் இந்திய அணிக்கு சாதகமாக முடிவுகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். தென்னாப்பிரிக்கா போட்டிக்கு பிறகு பேசிய அவர், “ ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நீங்கள் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை கவனியுங்கள். வான் டர் டஸ்ஸெனுக்கு பந்துவீசிய போது லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து, எப்படி மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. அது எப்படி சாத்தியம்?. இம்பேக்ட் லைனை பார்த்தால் அது நேராக செல்வது போல் தான் இருந்தது. ஆனால் பந்து லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. எல்லோரையும் போலவே நானும் என் கருத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். டிஆர்எஸ் தவறாக கையாளப்படுவது தெளிவாக தெரிகிறது” என தொடர்ந்து இந்திய அணி மீது குற்றஞ்சாட்டி வருகிறார் ஹசன் ராஷா.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஷா தொடர்ந்து இந்திய பவுலர்கள் மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டா ஸ்டோரி வைத்திருக்கும் முகமது ஷமி, “இதுபோன்ற ஒரு கருத்தை கூற ஒரு கிரிக்கெட் வீரராக வெட்கப்பட வேண்டும். ஹசன் ராஷா யாருடைய பேச்சையும் கேட்க விரும்பவில்லை என்றால், புகழ்பெற்ற பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுவதையாவது கவனமாகக் கேட்க வேண்டும். மற்ற அணி வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துகொள்ளுங்கள். நீங்கள் கூறுவது போல் நடக்க இது உங்கள் உள்ளூர் தொடர் அல்ல ஐசிசி உலகக்கோப்பை தொடர்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஹசன் ராஷா கருத்துக்கு பதிலளித்திருந்த வாசிம் அக்ரம், ”இதுபோன்ற ஒரு கருத்தை கூறி ஏன் உலக அரங்கில் பாகிஸ்தானை அவமதிக்கிறீர்கள். நீங்கள் கூறும் அந்த வீரர்களாக நான் இருக்க ஆசைப்படுகிறேன். டெக்னாலஜி எப்படி தவறாக காட்டும். இப்படி கருத்து கூறும்போது அவர்களுடைய அறிவை இழந்துவிடுகிறார்கள்” என சாடியிருந்தார்.