shami, dhoni pt web
கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெறும் நேரம் எது? ஷமிக்கு தோனி சொன்ன அட்வைஸ்...!

Angeshwar G

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வை அறிவித்தார். ஆனாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கிரிக்கெட் வீரர்கள் வரலாற்றில், ஓய்வு பெறுவது தொடர்பாக அதிகபட்ச கேள்விகள் தோனியிடம் கேட்கப்பட்டதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஐபிஎல் சீசன் முடிவிலும், இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என அவர் சொல்லும்போது, அரங்கமே அதிரும். அவர் கூறும் வார்த்தைகள் வைரலாகும். உதாரணமாக, definitely not என்பதைச் சொல்லலாம்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அவர் கேப்டனாக அல்லாமல், வீரராக விளையாடினார். அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி சீசன் முடிந்ததில் இருந்து இருக்கிறது. ஏனென்றால், கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் கொடுத்தது, அந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவதற்கான முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிவிப்புகளோ தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஒரு வீரர் ஓய்வு பெறுவதற்கான முடிவை எட்டுவது எப்போது என்பது குறித்த, தோனியின் அட்வஸை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

Mohammed Shami

யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு ஷமி கொடுத்த நேர்காணலில் இதுதொடர்பாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும்? என்று மஹி பாய்-யிடம் நானும் ஒருமுறை கேட்டேன். அதற்கு எனக்கு பதில் அளித்த அவர்,

1) நீங்களே விளையாட்டில் சலிப்படையும் போதும்

2) அணியில் இருந்து நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்பதை உணரும்போதும்

ஓய்வு பெறலாம் என தெரிவித்தார் அவர்.

MS Dhoni

இதில், முதல் மற்றும் முக்கியமான விஷயம் என்ன என்றால், எப்போது நீங்கள் ஆட்டத்தை ரசிப்பதை நிறுத்துகிறீர்களோ, அதுவே நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறி. ஓய்வு பெறுவதற்கான சிறந்த தருணத்தை நீங்கள் தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால், குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் உங்களால் தொடர்ந்து விளையாடமுடியவில்லை என்றால் அதை உங்களது உடலே உங்களிடம் தெரிவிக்கத் தொடங்கும் என தோனி என்னிடம் கூறினார்” என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.