shamar joseph web
கிரிக்கெட்

ஒரே நாளில் 17 wickets; மிரட்டிய WI வீரர் ஷமர் ஜோசப்! 5 டெஸ்ட்களில் 3 முறை five-fer எடுத்து சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடிய நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

shamar joseph

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஷமர் ஜோசப்பின் அபாரமான பந்துவீச்சால் 160 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

3வது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமர் ஜோசப்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். தொடக்க வீரர் டோனியை போல்டாக்கி வெளியேற்றிய ஜேடன் விக்கெட் எண்ணிக்கையை தொடங்கிவைக்க, மீதத்தை ஷமர் ஜோசப் பார்த்துக்கொண்டார்.

வேகப்பந்துவீச்சில் மேஜிக் நிகழ்த்திய ஷமர் மார்க்ரம் (14), வெர்ரின்னே (21), கேசவ் மகாராஜ் (0) முதலிய 3 வீரர்களின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்தார்.

உடன் கேப்டன் டெம்பா பவுமா (0) மற்றும் பெடிங்காம் (28) இருவரையும் வெளியேற்றிய ஷமர் ஜோசப் தன்னுடைய மூன்றாவது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். கடைசியாக 10வது வீரராக வந்த டி பீட் 38 ரன்கள் அடிக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா அணி.

இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பந்துவீசியிருக்கும் ஷமர் ஜோசப் தன்னுடைய 3வது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மற்றொரு பவுலரான ஜேடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

97-க்கு 7 விக்கெட்.. பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்கா!

160 ரன்னுக்கு சுருண்டாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதே அதிர்ச்சியை கொடுக்க தென்னாப்பிரிக்கா பவுலர்கள் களம் கண்டனர். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வியான் முல்டர் மற்றும் நன்ரே பர்கர் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களின் ஸ்டம்புகளை காற்றில் பறக்கவிட்டனர். இருவரின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 160 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளோடும் முடித்துள்ளன. தென்னாப்பிரிக்கா அணியில் முல்டர் 4 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.