கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. 2008 ஆசியக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதில்லை, அதேபோல இரண்டு அணிகளும் பங்கேற்று விளையாடிய இருதரப்பு தொடர் கடந்த 2006-ம் ஆண்டு நடந்ததே கடைசியாக இருந்துவருகிறது.
இதற்கிடையில் பல தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மட்டும் பொதுவான ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் பாகிஸ்தான் அணியும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா வந்து விளையாடாது என்று அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனாலும் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று கூறப்படுகிறது. அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவேண்டும் என பிசிசிஐ மற்றும் விராட் கோலியிடம் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இரண்டுமே இருநாட்டு ரசிகர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் ஷாகித் அப்ரிடி, விளையாட்டிலிருந்து அரசியலைத் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும், கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் இருநாட்டிற்கு இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும் என கூறியிருக்கும் அப்ரிடி, “இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவேற்கிறேன். பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதெல்லாம் எங்களுக்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. அதேபோல இந்தியா 2005-2006ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய வீரர்களுக்கு அதிக அன்பு கிடைத்தது. விளையாட்டை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை மேம்படுத்த இரு நாடுகளும் பங்கேற்று கிரிக்கெட் நடத்துவதை விட சிறந்த வழி எதுவுமில்லை” என்று நியூஸ்24 ஸ்போர்ட்ஸிடம் அப்ரிடி கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர், “விராட் கோலிக்கு பாகிஸ்தானில் அதிகப்படியான மோகமும், அதிகப்படியான ரசிகர்களும் இருக்கின்றனர். விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடினால், இங்குஅவர் பெறும் அன்பையும் விருந்தோம்பலையும் கண்டு வியந்துபோய், இந்தியாவில் தனக்குக் கிடைக்கும் அன்பை மறந்துவிடுவார்” என்று கூறியுள்ளார்.