இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அது கிரிக்கெட் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் அனைத்து உலகநாடுகளும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு அதிகமான கவனம் செலுத்துகின்றனர். கடந்த 2022 டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் மோதலில் கூட மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் 90,293 எண்ணிக்கையிலான ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
வெளிநாட்டில் நடக்கும் போட்டிக்கே அப்படியென்றால், தற்போது உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான 1,32,000 இருக்கைகள் கொண்ட நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. இந்நிலையில் மிகப்பெரிய போட்டிக்கு முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இரண்டு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.
வலுவான இந்திய அணிக்கு எதிராக முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவுசெய்ய வேண்டும் என்றும், 7-0 என உடைக்க முடியாமல் இருந்துவரும் ரெக்கார்டை உடைக்க வேண்டும் என்பதற்காகவும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்துவரும் ஃபீல்டிங்கை மேம்படுத்தும் வகையில், பாபர் அசாம், ஹரிஸ் ராஃப், ஷதாப் கான், அப்துல்லா ஷபீக், இப்திகார் அகமது மற்றும் ஹசன் அலி ஆகியோர் அடங்கிய பத்து வீரர்கள் கொண்ட குழு பீல்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டது. ஒரு ஸ்டம்பை மட்டுமே இலக்காக கொண்டு வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் ஒருவரையொருவர் துல்லியமாக வீசிய போது கொண்டாடியும், ஸ்டம்ப் மிஸ் ஆன போது ஊக்கம் அளித்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
பயிற்சியின் போது மிகவும் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது, சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டது தான். மோர்னே மோர்கல் தலைமை தாங்கிய இந்த பயிற்சி அமர்வில் ஷதாப் கான், முகமது நவாஸ், இப்திகார் அகமது மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தன்னுடைய பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சிகளை முடித்துவிட்டு வெளியேறிய போது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக நின்றிருந்த நிரூபர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது பேசியிருக்கும் ஷாகீன் அப்ரிடி, “ (Zaroor selfie loonga, but five wicket lene ke baad) நான் நிச்சயமாக உங்கள் எல்லோருடனும் செல்ஃபி எடுத்துக்கொள்வேன், ஆனால் அது இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு தான்” என கூறியிருப்பதாக RevSportz மேற்கோள் காட்டியுள்ளது.