ஷாஹீன் ஷா அப்ரிடி web
கிரிக்கெட்

ஒற்றுமை இல்லை.. ஷாஹீன் அப்ரிடியை நீக்கிய PAK.. விக்கெட் வேட்டை நடத்தும் டொமஸ்டிக் பவுலர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒற்றுமையில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், மூத்த பவுலர் ஷாஹீன் ஷா அப்ரிடி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் டிராப் செய்யப்பட்டார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னால் இருந்தே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் அடைந்த மோசமான தோல்விக்கு பிறகு பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தான் தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டது.

புதிய பாகிஸ்தான் கேப்டன்களாக டி20 அணிக்கு ஷாஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக டி20 கேப்டன் பதவியிலிருந்தும், டெஸ்ட் துணைக்கேப்டன் பதவியிலிருந்தும் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டார்.

Shaheen

பாபர் அசாம் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு சென்ற பாகிஸ்தான் அணி அமெரிக்காவுடனான படுதோல்வி மற்றும் இந்தியாவிற்கு எதிரான எளிதான வெற்றியை கோட்டைவிட்டது என மோசமாக செயல்பட்டு தொடரிலிருந்து வெளியேறியது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் மூன்று குழுக்கள் பிரிந்து இருப்பதாகவும், அதனால் அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும் குற்றஞ்சாட்டினர். மேலும் ஏன் தேர்வுக்குழுவையும், பயிற்சியாளர்களையும் மாற்றுகிறீர்கள், ஒற்றுமையுடன் இல்லாத எந்தவீரராக இருந்தாலும் வெளியேற்றுங்கள், ஒன்றாக சேர்ந்துதான் வெற்றியை பெறமுடியும், அதிரடியான அணுகுமுறைதான் வீரர்களை ஒற்றுமையுடன் இருக்கச்செய்யும் என்றும் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

babar azam

அதேநேரம் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையில்லாதது குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் ஒரு அணியே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை, அனைவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல குழுக்களுடன் வேலை செய்திருக்கிறேன், ஆனால் நான் இதுபோலான ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை” என்று கடுமையாக சாடியிருந்தார்.

ஷாஹீன் அப்ரிடியை குற்றஞ்சாட்டிய மற்ற வீரர்கள்..

பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையில்லை என்ற விவகாரம் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலும் பிரதிபலித்துள்ளது. முதல் போட்டியில் அவசர அவசரமாக டிக்ளார் செய்தது முதல், பவுலர்களின் மோசமான செயல்பாடுகளால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை தழுவியது.

தோல்விக்கு பிறகு ஷாஹீன் ஷா அப்ரிடி சகவீரர்களுடன் ஒற்றுமையுடன் இல்லை என்ற குற்றச்சாட்டும், சகவீரரின் கையை ஷாஹீன் அப்ரிடி தட்டிவிடும்படியான புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே ஒரு அறிக்கை தோல்விக்கு ஷாஹீன் ஷா அப்ரிடிதான் காரணம் என அணியில் இருக்கும் சில வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் சில உறுப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டதாக அதிர்ச்சியை கிளப்பியது.

shaheen

அது உண்மையில்லை என கூறப்பட்டாலும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டார். நீக்கத்திற்கான காரணத்தை சொல்லாத பாகிஸ்தான் பயிற்சியாளர், ‘அவர் சில விசயங்களில் வேலைசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார், ஆலோசனையை அவரும் புரிந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார், அவரை நாங்கள் சிறந்தமுறையில் மட்டுமே பார்க்க விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி சொல்லப்படாமலே நீக்கப்பட்டதாகவும், நீக்கத்திற்கு பிறகு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கெட் வேட்டை நடத்தும் டொமஸ்டிக் பவுலர்கள்..

ஷாஹீன் அப்ரிடி நீக்கத்திற்கு பிறகு வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட மூன்று மூத்த பவுலர்கள் விளையாடிவருகின்றனர். தங்களுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் குர்ரம் ஷாஜாத் 4 விக்கெட்டுகள் மற்றும் மிர் ஹம்சா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 274 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி குர்ரம் ஷாஜாத் மற்றும் மிர் ஹம்சாவின் அதிரடியான பவுலிங்கால் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் உள்நாட்டு கிரிக்கெட் பவுலர்களான மிர் ஹம்சா 442 விக்கெட்டுகள், முகமது அலி 146 விக்கெட்டுகள், குர்ரம் ஷாசாத் 136 விக்கெட்டுகள் முறையே வீழ்த்தியுள்ளனர்.