ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தரமான வேகப்பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை 204/8, 163 மற்றும் 140 ரன்களில் ஆல்அவுட் செய்து தொடரை 2-1 என கைப்பற்றியது.
தொடர் நாயகன் விருது வாங்கிய ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானை 22 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 2002-க்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றுவது இதுவே முதல்முறை.
இந்நிலையில் வரலாற்று தொடர் வெற்றிக்கு பிறகு பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஷாஹீன் அப்ரிடி மற்றும் பாபர் அசாம் இருவரும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு திரும்பியுள்ளனர்.
ஐசிசி தரவரிசையின் சமீபத்திய அப்டேட்டின் படி, ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் 4வது இடத்திலிருந்த பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி முதலிடத்திகு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 12.62 சராசரியுடன் 3 போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியது அப்ரிடியை அவருடைய சிறந்த நிலைக்கு மீண்டும் உயர்த்தியுள்ளது.
அதேபோல 10 விக்கெட்டுகளுடன் தொடர் நாயகன் விருது வென்ற ஹாரிஸ் ராஃப், அவருடைய சிறந்த ரேங்கிங்காக 13வது நிலைக்கு உயர்ந்துள்ளார். நசீம் ஷா 14 இடங்கள் முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 80 ரன்கள் அடித்து நாட் அவுட்டுடன் சென்ற பாபர் அசாம், ODI பேட்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்திய வீரர்களை பொறுத்தவரையில் பேட்டிங்கில் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் 4வது இடம், ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 2வது இடம், டி20-ல் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தையும் அதிகபட்சமாக பிடித்துள்ளனர். பந்துவீச்சில் டெஸ்ட்டில் பும்ரா 3வது இடம், ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் 4வது இடம், டி20யில் ரவி பிஸ்னோய் 7வது இடமும் அதிகபட்சமாக தக்கவைத்துள்ளனர்.
சமீபத்தில் டி20-ல் சதமடித்த சஞ்சு சாம்சன் 27 இடங்கள் முன்னேறி 39வது இடத்தை பிடித்துள்ளார்.