Charlie Cassell web
கிரிக்கெட்

அறிமுக போட்டியில் 7 விக்கெட்டுகள்.. ODI கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து பவுலர்!

Rishan Vengai

ஐசிசியின் கிரிக்கெட் உலகக்கோப்பை லீக் 2 தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரான இதில் கனடா, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், ஓமன், யுஏஇ உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான குவாலிஃபயர் போட்டிகளுக்கு தகுதிபெறும் வகையில், இரண்டாம் நிலை அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிகள் குவாலிஃபயர் போட்டிகளுக்கு தகுதிபெறும் அல்லது குவாலிஃபயர் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும்.

Charlie Cassell

இந்நிலையில் இந்த தொடரின் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. டண்டீயில் நடைபெற்ற இந்த போட்டியில் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்காட்லாந்து வேகப்பந்துவீச்சாளர் சார்லி கேசல், 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

அறிமுக போட்டியில் சிறந்த பிக்சர்.. உடைக்கப்பட்ட ஆல்டைம் ரெக்கார்டு!

ஓமன் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசிய ஸ்காட்லாந்து அணி, ஓமனை 21.4 ஓவரிலேயே 91 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கி கலக்கிப்போட்டது. அபாரமாக பந்துவீசிய ஸ்காட்லாந்து வேகப்பந்துவீச்சாளர் சார்லி கேசல், தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 5.4 ஓவரில் ஒரு மெய்டனுடன் 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Charlie Cassell

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே அதிகவிக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக மாறி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு இந்த சாதனையை 2015-ல் அறிமுகமான தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, வங்கதேசத்துக்கு எதிராக 16 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி படைத்திருந்தார். அதனை தற்போது ஸ்காட்லாந்து பவுலர் கேசல் உடைத்து, ஆல்டைம் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

அறிமுக போட்டியில் சிறந்த பிக்சர்:

* சார்லி கேசல் - ஸ்காட்லாந்து vs ஓமன் - 7/21 (2024)

* ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம் - 6/16 (2015)

* ஃபிடெல் எட்வர்ட்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே - 6/22 (2003)

92 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. 2019-2023 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை லீக்கின் சாம்பியன் ஸ்காட்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.