போட்டி 15: நெதர்லாந்து vs தென்னாப்பிரிக்கா
மைதானம்: ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தரம்சாலா
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 17, மதியம் 2 மணி
நெதர்லாந்து:
போட்டிகள் - 2, வெற்றி - 0, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 0
முதல் போட்டி vs பாகிஸ்தான்: 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இரண்டாவது போட்டி vs நியூசிலாந்து: 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது
தென்னாப்பிரிக்கா:
போட்டிகள் - 2, வெற்றி - 2, தோல்விகள் - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
முதல் போட்டி vs இலங்கை: 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இரண்டாவது போட்டி vs ஆஸ்திரேலியா: 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது
விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே நெதர்லாந்து சேஸிங் செய்து தோல்வியை சந்தித்தது. இரு போட்டிகளிலுமே பெரிய இலக்கை சேஸ் செய்த அந்த அணியால் அந்த நெருக்கடியை சமாளித்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க பேட்டிங்கை சமாளிப்பது அவர்களுக்கு இன்னும் பெரிய சவாலாக இருக்கும். அதை சமாளித்தால் தான் அவர்களால் வெற்றியை நினைத்துக்கூடப் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒருசில வீரர்களுக்கு இந்தப் போட்டி எமோஷனலான ஒன்றாக இருக்கும். சீனியர் ஸ்பின்னர் வேன் டெர் மெர்வ் தென்னாப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் விளையாடியவர். சைபிரேண்ட் எங்கல்பிரெக்ட் தென்னாப்பிரிக்காவுக்காக அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறார். இந்த வீரர்கள் உலகக் கோப்பை அரங்கில் இப்போது தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடப்போகிறார்கள். ஜானதன் டிராட்டின் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் இவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தால் அட்டகாசமாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் நெதர்லாந்தைக் கண்டாலே குசி ஆகிவிடும். இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்கா 300+ ஸ்கோர்கள் அடித்திருக்கிறது. கிப்ஸ் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடித்தது நினைவில் இருக்கலாம். ஆனால் இது வரலாறு மட்டுமல்ல. இந்த உலகக் கோப்பையிலுமே இரு போட்டிகளிலும் 300+ ஸ்கோர்கள் அடித்திருக்கிறது அந்த அணி. 300 என்ன 400 ரன்களையே கடந்துவிட்டது. அப்படிப்பட்ட பேட்டிங் யூனிட்டை நெதர்லாந்து பௌலர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்களோ!
குவின்டன் டி காக் கடந்த 2 போட்டிகளிலுமே சதமடித்து அட்டகாச ஃபார்மில் இருக்கிறார். சங்கக்காராவைப் போல் தொடர்ந்து 4 உலகக் கோப்பை சதம் அடிப்பதை அவர் இலக்காக வைத்திருப்பார். அதற்கு சரியான அணி கிடைத்திருக்கிறது. வேன் டெர் டுசன், மார்க்ரம், கிளாசன், மில்லர் எல்லோருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பௌலர்களுமே சிறப்பாக செயல்பட்டு பெரும் நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அது நல்ல போட்டியாக அமைந்தது.
தரம்சாலாவில் இதுவரை நடந்திருக்கும் இத்தொடரின் இரு போட்டிகளிலும் மாறுபட்ட முடிவுகளே கிடைத்திருக்கின்றன. முதலில் பேட் செய்த அணியும் வென்றிருக்கிறது, சேஸ் செய்த அனியும் வென்றிருக்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் இங்கு நன்கு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்கள். அதனால் தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியிலும் மஹராஜ், ஷம்ஷி இருவரையுமே களமிறக்கும்.
நெதர்லாந்து - காலின் அகெர்மென்: கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய அகெர்மென் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மிகமுக்கிய தூணாக இருப்பார். தன் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சால் இந்த மைதானத்தில் அவரால் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும்.
தென்னாப்பிரிக்கா - டெம்பா பவுமா: தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மாறி மாறி பெரிய ஸ்கோர்கள் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் டெம்பா பவுமாவிடம் இருந்து ஒரு இன்னிங்ஸ் வரவில்லை. இந்த நெதர்லாந்து அணி அவர் தன் அசத்தல் பெர்ஃபாமன்ஸைக் காட்டுவதற்கு ஒரு சரியான அணியாக இருக்கும்.