Aiden Markram Kunal Patil
கிரிக்கெட்

SAvBAN | தென்னாப்பிரிக்காவை சமாளிக்குமா வங்கதேசம்? இன்னொரு ரன் மழைக்குக் காத்திருக்கும் வான்கடே..!

வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி இது. முதல் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 399 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டி ஆடப்படும் ஆடுகளமும் நிச்சயம் அப்படியே தான் இருக்கும்.

Viyan
போட்டி 23: வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா
மைதானம்: வான்கடே, மும்பை
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 24, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை

வங்கதேசம்
போட்டிகள் - 4, வெற்றி - 1, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது
சிறந்த பேட்ஸ்மேன்: முஷ்ஃபிகுர் ரஹீம் - 157 ரன்கள்
சிறந்த பௌலர்: ஹகிப் அல் ஹசன் - 5 விக்கெட்டுகள்
2019 உலகக் கோப்பையில் நல்ல தாக்கம் ஏற்படுத்தியிருந்த வங்கதேச அணி, துணைக் கண்ட ஆடுகளங்களில் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நல்லதொரு வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் அதன்பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா போன்ற பெரிய அணிகளிடம் தோல்வியடைந்திருக்கிறது. ஹாட்ரிக் தோல்வி ஒருபக்கம் என்றாலும், தோல்வியடையும் வித்தியாசமும் கவலை தருவதாக உள்ளது.

Marco Jansen | Quinton de Kock | Rassie van der Dussen | Heinrich Klaasen

தென்னாப்பிரிக்கா
போட்டிகள் - 4, வெற்றிகள் - 3, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது
சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 233 ரன்கள்
சிறந்த பௌலர்: ககிஸோ ரபாடா - 8 விக்கெட்டுகள்
தங்களின் அசாத்திய பேட்டிங் செயல்பாட்டால் வெற்றிகளைக் குவித்துகொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. நெதர்லாந்துக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்திருந்தாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற முன்னணி அணிகளைப் புரட்டி எடுத்திருக்கிறது. வெற்றி பெற்ற அந்த 3 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து 300+ ஸ்கோர்களை பதிவு செய்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.

மைதானம் எப்படி?

வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி இது. முதல் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 399 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டி ஆடப்படும் ஆடுகளமும் நிச்சயம் அப்படியே தான் இருக்கும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்யவே நினைக்கும். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற 3 போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. வங்கதேச அணி அவர்களின் சூரசம்ஹாரத்திலிருந்து தப்பிக்கவேண்டுமெனில் முதலில் பேட்டிங் செய்வது நல்லது.

வரலாறு வங்கதேசம் பக்கம்

Mushfiqur Rahim

வங்கதேச அணியின் சமீபத்திய ஃபார்ம் சுமாராக இருந்தாலும், வரலாறு அவர்களுக்குக் கொஞ்சம் ஊக்கமளிக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 போட்டிகளில் மூன்றில் வென்றிருக்கிறது வங்கதேசம். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை அரங்கில் விளையாடிய 4 போட்டிகள்ல் தென்னாப்பிரிக்காவை இரு முறை தோற்கடித்திருக்கிறது வங்கதேசம். கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 330 ரன்கள் குவித்த வங்கதேச அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்த பழைய ரெக்கார்டுகளை வங்கதேசம் அப்டேட் செய்ய நினைக்கும். ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்னவெனில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாடுவாரா என்று தெரியாது. முழு ஃபிட்னஸ் இல்லாததால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் ஆடவில்லை. 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை அந்த அணி வீழ்த்தியபோது அவர் தான் ஆட்ட நாயகன். அதுமட்டுமல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் வங்கதேச பௌலிங்கில் இப்போதைக்கு டாப் விக்கெட் டேக்கரும் அவர்தான். அதனால் அவரது வருகையை வங்கதேச அணி பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது. பந்துவீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அந்த அணி ஷகிப்பை பெரிதாக நம்பியிருக்கும். முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் மட்டுமே அந்த அணிக்காக 100 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த அணியும் எழுச்சிபெறவேண்டிய தருணம் இது.

இன்னொரு 400 ஸ்கோரை டார்கெட் செய்யுமா தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணிக்கும் கேப்டன் பவுமா ஆடுவது சந்தேகம் தான். ஆனால் அது அவர்களுக்கு பின்னடைவாக அமையவில்லை. பவுமாவுக்குப் பதில் கடந்த போட்டியில் களமிறங்கிய ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அவரை விடவுமே நன்றாக விளையாடினார். அதனால் தென்னாப்பிரிக்க அணி கவலைப்படாது. இதுவரை 4 வேறு வீரர்கள் மொத்தம் 5 சதங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அணி பேட்ஸ்மேன்களில் மில்லரின் (பவுமா தவிர்த்து) 34.66 என்ற சராசரி தான் குறைவானது. 428, 399 என்ற இமாலய ஸ்கோர்களை பதிவு செய்யும் அந்த அணி, பலவீனமான வங்கதேசத்தின் பந்துவீச்சை நிச்சயம் டார்கெட் செய்யும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

வங்கதேசம் - மெஹதி ஹசன் மிராஜ்: முதல் போட்டியில் அசத்திய ஆல்ரவுண்டர் மிராஜ் மீண்டும் ஒரு சூப்பர் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தால் தான் தென்னாப்பிரிக்க அணியை தாக்குப்பிடிக்க முடியும்.

தென்னாப்பிரிக்கா - ஹெய்ன்ரிச் கிளாசன்: வங்கதேச ஸ்பின்னர்களுக்கு எதிராக, ஸ்பின்னை மிகவும் விரும்பும் கிளாசன் இன்னொரு சதம் அடித்தாலும் அடிக்கலாம்.