சர்பராஸ் கான் x
கிரிக்கெட்

‘தம்பிக்காக நான் அடிக்கிறன்’ 25 பவுண்டரி, 4 சிக்சர், 221 ரன்கள்.. இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கான்!

Rishan Vengai

இரானி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட சென்றபோது, சர்பராஸ் கான் தம்பியான முஷீர்கான் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு முஷீர் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவருகிறார்.

musheer khan

இந்நிலையில் நடந்துவரும் இரானி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான், 25 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இரட்டைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

536 ரன்கள் குவித்த மும்பை..

2024 ரஞ்சிக்கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை லக்னோவில் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்கான மும்பை அணியில் இடம்பெற்றிருந்த முஷீர்கான், அவருடைய சொந்த ஊரிலிருந்து குடும்பத்துடன் இரானி கோப்பையில் விளையாட லக்னோ சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார். கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், முஷீர் கானுக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது சிகிச்சையை கண்காணித்து வருவதாக மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ அறிவித்தது.

முஷீர் கான்

இந்நிலையில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை போட்டி நடந்துவருகிறது.

முதலில் பேட்டிங் செய்து விளையாடிய மும்பை அணி 37 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் அரைசதமடித்து 57 ரன்னில் வெளியேற, சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரஹானே 97 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இரட்டை சதம் விளாசிய சர்பராஸ்..

ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, 6வது வீரராக பேட்டிங் செய்யவந்த சர்பராஸ் கான் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, யாஷ் தயாள் முதலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சர்பராஸ் கான், சதமடித்து அசத்தியது மட்டுமில்லாமல் இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தார்.

276 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 25 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 221* ரன்களை குவித்திருக்கும் சர்பராஸ் கான், இரானி கோப்பையில் இரட்டை சதமடித்த முதல் மும்பை வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

இரண்டாவது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன்களை மும்பை அணி குவித்துள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சர்பராஸ் கான் 221 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நீடிக்கிறார்.