sarfaraz khan debut web
கிரிக்கெட்

”இருள் அப்படியே இருந்துவிடப்போவதில்லை”!- மகனின் தாமதமான அறிமுகம் குறித்து சர்பராஸ் தந்தை எமோசனல்!

சர்பராஸ் கானின் நீண்டகால காத்திருப்பு ஒருவழியாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முடிவுக்கு வந்துள்ளது. தாமதமாக சர்பராஸ் அறிமுகமாகியிருந்தாலும் தந்தை அவருக்கான நாள் நிச்சயம் வரும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர், 2000 ரன்களுக்கு மேல் அடித்து அதிக சராசரி (82.23) வைத்திருந்த வீரர்களில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரர், ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சராசரி (154) வைத்திருந்த 2வது வீரர், ஜோ ரூட்டுக்கு பிறகு முதல்தர கிரிக்கெட்டில் 6 முறை 150 ரன்கள் அடித்த வீரர் என சாதனைகளுக்கு மேல் சாதனைகளாக குவித்தாலும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மட்டும் அவ்வளவு எளிதில் சர்ஃபராஸ் கானுக்கு கிடைத்துவிடவில்லை.

மூன்று சீசன்களாக ரஞ்சிக்கோப்பையின் நம்பர் 1 வீரராக ஜொலித்த போதும் இந்திய அணியில் இடம் கிடைக்காததால், இரவெல்லாம் அழுததாக பொதுவெளியில் வெளிப்படுத்தினார் சர்ஃபராஸ் கான். ஆனாலும் இதற்கு முன் இருந்த தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானின் நடத்தையையும், உடல் பருமனையும் குற்றஞ்சாட்டியது. ஆனால் ரசிகர்களும், சுனில் கவாஸ்கர், டி வில்லியர்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய கிரிக்கெட் வீரர்களின் ஆதரவும் தொடர்ந்து அவருக்கு இருந்துவந்தது.

sarfaraz khan

இந்நிலையில் நீண்டகால காத்திருப்புக்கு விடை கிடைக்கும் வகையில், அஜித் அகர்கர் தலைமையிலான தற்போதைய தேர்வுக்குழு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் கிடைக்காததால் சர்பராஸ் கானை அணிக்குள் எடுத்துவந்தது. சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் தேர்வுசெய்த நிலையில், தன் மகனுக்கு வாய்ப்பளித்ததற்கு வீடியோ வெளியிட்டு சர்பராஸ் கானின் தந்தை பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து சர்பராஸ் கானும் கண்ணில் கண்ணீரோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று தன்னுடைய முதல் போட்டியிலும் பங்கேற்றுவிட்டார் சர்ஃபராஸ் கான். இத்தருணத்தில் மகனின் தாமதமான அறிமுகம்குறித்து பேசியிருந்த தந்தை நௌஷாத் கான் ஒரு அற்புதமான பதிலை கூறி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

இருள் எப்போதும் அப்படியே இருந்துவிடாது! - சர்பராஸ் தந்தை

தன்னுடைய மகன் சர்ஃபராஸ் கான் விளையாடும் போது வர்ணனை அறையில் இடம்பெற்ற தந்தை நௌஷாத் கானிடம், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு கேள்வியை எழுப்பினார். உங்களுடைய மகனின் அறிமுகம் மிகவும் தாமதமாக வந்ததுள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு ஒரு அற்புதமான பதிலை கூறிய அவர், “இருள் சூழ்ந்த இரவானது கடந்து செல்வதற்கு நேரம் எடுக்கும், நம் விருப்பப்படி சூரியன் ஒருபோதும் உதிக்கப் போவதில்லை” என்று கவித்துவமாகவும் ஆழமாகவும் பதிலளித்தார். அவரது வார்த்தைகள் ஒருவரின் கனவுகளை அடைவதற்கான பாதையில் அடிக்கடி தேவைப்படும் பொறுமையையும், நிதானத்தையும் எதிரொலித்தது.

sarfaraz khan father

மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தந்தைக்கும் தன் மகனோ/ மாணவனோ ஒருநாள் நாட்டிற்காக விளையாடுவான் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது. ஆனால் அவன் தொப்பியைப் பெற்றால் மட்டுமே அதனை உலகம் நம்புகிறது. அது எப்போதும் கனவாகவே போய்விடும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும் என்று எனக்குத் தெரியும். என் வாழ்வில் பலரைப் பார்த்துள்ளேன், அவர்களில் சிலர் சீக்கிரம் அதைப் பெறுவார்கள். சிலர் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று நௌஷாத் கான் விளக்கினார்.

மகன் கேப் வாங்கிய தருணம் குறித்து பேசிய அவர், "முதலில் இந்த நாளைப் பார்க்க அனுமதித்த இறைவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தேன், கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. இந்த நாளிற்காக நான் பல முறை அழுதுள்ளேன். ஆனால் தற்போது ஒரு தந்தையாகவும், பயிற்சியாளராகவும் நான் அழுவது நன்றாக இருக்காது என்று நினைத்தேன். இருப்பினும் என்னால் இத்தருணத்தின் பேரூற்றை தாங்க முடியவில்லை” என்று அழுதது குறித்து ஜியோசினிமாவில் நௌஷாத் கான் கூறினார்.