சூர்யகுமார் - சஞ்சு சாம்சன் cricinfo
கிரிக்கெட்

“நீங்க ரன் அடித்தாலும், அடிக்காவிட்டாலும்..” கேப்டன் SKY கொடுத்த நம்பிக்கை! சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை குறித்து சஞ்சுசாம்சன் ஓப்பனாக பேசியுள்ளார்.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் விளையாடிய இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் 202 ரன்கள் குவித்தது. 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என விளாசிய சஞ்சு சாம்சன் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து பல சாதனைகளை தன் பெயரில் எழுதினார்.

அதன்பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டி20 சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் தனக்கு அளித்த நம்பிக்கைகுறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் தான் என்னுடைய ஓப்பனர்..

அதிக டி20 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (4) மற்றும் கே.எல்.ராகுல் (2) ஆகியோருக்குப் பிறகு 2 சதங்களுடன் சஞ்சு சாம்சன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல ரோஹித் மற்றும் சூர்யகுமாருக்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிக (2) T20I சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரராகவும் சஞ்சு சாம்சன் மாறினார்.

இந்நிலையில் தன்னுடைய பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யாவின் வார்த்தைகள் எந்தளவிற்கு நம்பிக்கை கொடுத்தது என்று சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜியோ சினிமாவுடன் பேசியிருக்கும் சஞ்சு, “நான் துலீப் டிரோபியில் விளையாடும் போது, ​​சூர்யாகுமார் என்னிடம் வந்து நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்தாலும், அடிக்காவிட்டாலும் அடுத்த 7 போட்டிகளில் இந்தியாவுக்காக ஓப்பன் செய்யப்போகிறீர்கள் என்று கூறினார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய உறுதியை அளித்தார். இப்படியான கேப்டனின் நம்பிக்கையானது உங்களுக்கு கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது" என்று சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.