சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் எக்ஸ்தளம்
கிரிக்கெட்

IND Vs SA | 2 முறை டக் அவுட் ஏன்? சஞ்சு சாம்சன் சொன்ன பதில்!

“தொடர்ந்து 2 முறை டக் அவுட்டான பின், ஏராளமான சிந்தனைகள் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது” என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Prakash J

தொடரை வென்றது இந்திய அணி

தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த நிலையில், நான்காவது டி20 போட்டி, நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டியதன் விளைவு, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்களைக் குவித்தது.

பின்னர், ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக, அதிரடியில் மிரட்டிய சாம்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இதில் 8 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடக்கம். அவரை விரட்டி வந்த திலக் வர்மாவும் 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 9 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம்.

இந்த நிலையில் தொடரில் 2 சதம் அடித்தது குறித்து திலக் வர்மா, “இந்த டி20 தொடரிலும் எனக்கு இந்த இன்னிங்ஸ் முக்கியமானது எனக் கருதுகிறேன். எனது திறமை மீது நம்பிக்கை வைத்து அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. களத்திலும் நிதானமாக அடிப்படையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். நிச்சயம் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசுவேன் என்று கற்பனைகூடச் செய்யவில்லை.

அதனால் இந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அதுவும் தென்னாப்பிரிக்கா மண்ணில் 2 சதமடிப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. இதற்காக கடவுளுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக காயத்தில் அவதிப்பட்டு வந்தேன். அதன்பின் மீண்டு வந்த நான் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டு சதம் விளாசி இருக்கிறேன். அதற்காகதான் சதம் விளாசிய பின் வானத்தை நோக்கி கடவுளைக் கைகாட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

டக் அவுட் ஆக காரணம் என்ன- சஞ்சு சாம்சன் விளக்கம்

சதமடித்த சஞ்சு சாம்சன், ”என் வாழ்க்கையில் ஏராளமான தோல்விகளைச் சந்தித்துள்ளேன். கடைசியாக 2 சதங்களை தொடர்ச்சியாக விளாசியபின், அடுத்த 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறேன். இதனால் என் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்ததற்குச் சரியான பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து 2 முறை டக் அவுட்டான பின், ஏராளமான சிந்தனைகள் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா எனது அழுத்ததை முதல் சில ஓவர்களில் குறைத்துவிட்டார். அதேபோல் திலக் வர்மாவும் அழுத்தம் அருகில் வர கூட அனுமதிக்கவில்லை. அவருடன் ஏராளமான முறை இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறேன். இந்திய அணியின் எதிர்கால வீரரான அவருடன் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால், கடந்த முறை சதம் விளாசியபோது அதிகமாகப் பேசிவிட்டேன். அதன்பின் 2 முறை டக் அவுட்டாகினேன்” எனத் தெரிவித்துள்ளார்

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா - இருவரில் சிறந்த வீரர் யார்?

தொடரைக் கைப்பற்றியது குறித்து சூர்யகுமார் யாதவ், “கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போதும், இதே போன்ற ஸ்டைலில்தான் விளையாடினோம். அதனை அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். இந்தப் போட்டியில் எங்களின் பாசிட்டிவ் செயல்பாடுகளை தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். நிச்சயம் முடிவுகளை பற்றி எந்த சிந்தனையும் இல்லை.

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரின் பேட்டிங்கில் எந்த இன்னிங்ஸ் சிறந்தது என்று சொல்வது கடினமான ஒன்று. ஆனால் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரின் பேட்டிங்கையும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அதேபோல் பவுலிங்கில் சொல்லி வைத்து வீழ்த்தி காட்டினார்கள். இந்த டி20 தொடரை பொறுத்தவரை சவால் நிறைந்த ஒன்றுதான். அதனால் இந்த வெற்றி ஸ்பெஷலானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம்.. ஊழியர்களிடம் கடும் உத்தரவு.. ஸ்வீடன் அமைச்சரின் வெளிவந்த ரகசியம்!