virat kohli web
கிரிக்கெட்

‘அவரது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார்..' விராட் கோலி விக்கெட் குறித்து மஞ்ச்ரேக்கர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 1 ரன்னில் விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

rachin

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று 1-1 என சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி மிகமோசமான நிலையில் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

மோசமான ஷாட்டில் வெளியேறிய விராட் கோலி..

80 சர்வதேச சதங்களை எட்டியிருக்கும் விராட் கோலி, தன்னுடைய 81வது சதத்திற்காக போராடி வருகிறார். எப்படி தன்னுடைய 71வது சதத்திற்கு நீண்ட இடைவெளியும், நிறைய பிரச்னைகளையும் எதிர்கொண்டாரோ 81வது சதத்திற்கும் அதையே பிரதிபலித்து வருகிறார்.

அதன் மோசமான வெளிப்பாடாக நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட் அமைந்தது. மிட்சல் சாண்ட்னர் வீசிய சாதாரண ஃபுல் டாஸ் பந்தை என்ன செய்வதென்று தெரியாமல் அரைகுறையான ஒரு ஷாட்டை விளையாடிய விராட் கோலி போல்டாகி வெளியேறினார்.

virat kohli

விராட் கோலியின் இந்த மோசமான ஷாட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், விராட் கோலி அவருடைய கரியரில் மிகமோசமான ஷாட்டை விளையாடி அவுட்டானார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “விராட் கோலி தனது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார் என்பது அவருக்கே தெரியும். எப்போதும்போல அவர் திடமான மற்றும் நேர்மையான நோக்கத்துடன் வெளியே வந்தார். ஆனால் மிகமோசமான ஷாட்டில் வெளியேறினார்” என்று பதிவிட்டுள்ளார். ரவி சாஸ்திரியும் அது பவுண்டரிக்கு செல்லவேண்டிய பந்து என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் போட்டியில் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இந்திய அணி விரைவில் நியூசிலாந்தை ஆல் அவுட்டாக்கும் பட்சத்தில் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கிறது. இல்லையெனில் 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கும் நிலைக்கு செல்லும்.