Sam Curran Twitter
கிரிக்கெட்

Eng vs Afg: கோவத்தில் கேமராமேனை தள்ளிவிட்ட சாம் கர்ரன்! விமர்சிக்கும் ரசிகர்கள்! என்ன காரணம்?

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

Rishan Vengai

அடுத்தடுத்த இரண்டு தோல்விகளுடன் ஆப்கானிஸ்தான் அணியும், ஒரு தோல்வி வெற்றியுடன் இங்கிலாந்து அணியும் இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன. தங்களுடைய முதல் வெற்றியை தேடி களமிறங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, டிஃபண்டிங் சாம்பியனான இங்கிலாந்து அணியை சோதித்து வருகிறது.

இங்கிலாந்தை வெளுத்துவாங்கிய குர்பாஸ்!

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள் ஏன் பந்துவீச்சை எடுத்தோம் என இங்கிலாந்தை புலம்பவிட்டனர். தரமான ஃபார்மில் இருக்கும் ரஹமனுல்லா குர்பாஸ் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய குர்பாஸ் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டு சாம் கர்ரனின் ஒரே ஓவரில் 20 ரன்களை எடுத்துவந்தார். தொடர்ந்து மார்க் வுட், அதில் ரஷித் என யார் போட்டாலும் சிக்சர்களாக பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

Gurbaz

ஒருபுறம் இப்ராஹின் குறைவான பந்துகளையே சந்தித்தாலும், அதிகமான ஸ்டிரைக்குகளை எடுத்த குர்பாஸ் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்த இந்த ஜோடி, ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச பவர்ப்ளே ரன்களை எடுத்துவந்தனர். தொடர்ந்து அட்டாக்கிங் கேமை நிறுத்தாத குர்பாஸ் சதமடிப்பார் என நினைத்த போது துரதிருஷ்டவசமாக 80 ரன்னில் ரன்னவுட்டாகி வெளியேறினார். பின்னர் தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் பங்களிப்பு போட 284 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான் அணி.

Butler

இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மைதானம் என்பதால் சேஸ் விடலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் கலங்கடித்து வருகின்றனர். அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் 196 ரன்களுடன் ஆடிவருகிறது. களத்தில் நம்பிக்கையளித்த ஹாரி ப்ரூக் 66 ரன்களுடன் நடையைக்கட்டினார். ப்ரூக்கை வெளியேற்றியதால் இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

கேமராமேனை தள்ளிவிட்ட சாம் கர்ரன்!

போட்டியின் 9வது ஓவரில் குர்பாஸுக்கு பந்துவீசிய சாம்கர்ரன், 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என விட்டுக்கொடுத்து 20 ரன்கள் ஓவரை பதிவுசெய்தார். அதற்கடுத்த ஓவரில் பவுண்டரி லைனுக்கு அருகில் ஃபீல்டிங் நின்றிருந்த சாம் கரனை நெருக்கமாக படம் பிடிக்க முயன்றார் அங்கிருந்த கேமராமேன் ஒருவர். ஆனால் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த கடுப்பில் இருந்த சாம்கரன், கேமராமேனின் செய்கையால் கோவமடைந்து அவரை பிடித்து தள்ளிவிட்டார்.

இந்த உலகக்கோப்பை முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வரும் சாம் கர்ரன், இந்த போட்டியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இந்நிலையில் கேமராமேனுக்கு எதிராக சாம்கரன் செயல்பட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.