நியூசி., சச்சின் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

NZ Vs IND | தொடரை இழந்த இந்திய அணி... நியூசிலாந்து ஆட்டம் குறித்து விமர்சித்த சச்சின்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து, பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Prakash J

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி, அபார வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்திடம் 36 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது.

தொடர்ந்து இன்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதையடுத்து, 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது, இந்திய அணி. மேலும், 18 தொடர் வெற்றிகளுக்கு பிறகு தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்திய அணி மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: நுரை பொங்கிய யமுனை | குளித்த டெல்லி பாஜக தலைவர்.. உடல்நலம் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!

தோல்வி குறித்து ரோகித் சர்மா, “நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. எங்களைவிடவும் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினர். முக்கியமான நேரத்தில் நாங்கள் கோட்டைவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இந்திய அணியின் ஜாம்வான் சச்சின் டெண்டுல்கர், “இந்தியாவிற்கு விளையாட வருகை தரும் எந்தவொரு அணியும், டெஸ்ட் தொடரை வெல்வது என்பதுதான் அதன் கனவாக இருக்கும். நன்றாக விளையாடிய நியூசிலாந்தும் அதைத்தான் செய்துள்ளது. சிறப்பான ஆல்-ரவுண்ட் குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கிரிக்கெட் விளையாடிய அரசு மருத்துவர்கள்.. காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி!