Andy Flower Twitter
கிரிக்கெட்

RCB-யின் கோப்பை கனவை நிஜமாக்குவாரா புதிய பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Viyan

2022 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் மற்றும் டைரக்டர் ஆஃப் கிரிக்கெட் மைக் ஹெசன் ஆகியோரின் ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படாத நிலையில், அந்த அணியின் ஏழாவது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆண்டி ஃபிளவர்.

இன்னும் தங்களின் முதல் ஐபிஎல் பட்டத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 16 ஆண்டுகளாய் ஒரு கோப்பைக்கான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தேடலில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது அந்த அணி. அணி வீரர்களில் எண்ணற்ற மாற்றங்கள் எப்போதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது மீண்டும் பயிற்சியாளரை மாற்றியிருக்கிறது அந்த அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சியாளர்கள் பட்டியல்:

வெங்கடேஷ் பிரசாத் - இந்தியா: 2008 - 2009

ரே ஜென்னிங்ஸ் - தென்னாப்பிரிக்கா: 2010 - 2013

டேனியல் வெட்டோரி - நியூசிலாந்து: 2015 - 2018

கேரி கிறிஸ்டன் - தென்னாப்பிரிக்கா: 2019

சைமன் கேடிச் - ஆஸ்திரேலியா: 2020 - 2021

சஞ்சய் பங்கர் - இந்தியா: 2022 - 2023

ஆண்டி ஃபிளவர் - ஜிம்பாப்வே: 2023 முதல்

Royal challengers bangalore

2018 வரையிலும் அணி வீரர்களில் நிறைய மாற்றங்கள் செய்தாலும் பயிற்சியாளர்களை பெரிதாக அந்த அணி மாற்றவில்லை. அந்த அணியின் முதல் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் இரண்டு ஆண்டுகளில் மாற்றப்பட்டாலும் அதற்கடுத்து பதவியேற்ற ரே ஜென்னிங்ஸ், டேனியல் வெட்டோரி இருவரும் 4 சீசன்கள் அந்த அனியோடு பணியாற்றினர். 2019ல் இருந்துதான் அவர்களின் பயிற்சியாளர் மாற்றம் அதிகரித்தது. இந்த 5 ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றம் நடந்திருக்கிறது.

முந்தைய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் RCB அணியோடு இரண்டு ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார். அதேபோல் அந்த அணியின் டைரக்டர் ஆஃப் கிரிக்கெட்டாக 4 சீசன்கள் பணியாற்றிய மைக் ஹெசன் ஆகியோரின் ஒப்பந்தங்கள் 2022 சீசனோடு முடிவுக்கு வந்தன. அதை பெங்களூரு அணி நிர்வாகம் தொடரவில்லை. அதனால் ஆண்டி ஃபிளவர் இப்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆண்டி ஃபிளவரைப் பொறுத்தவரை அவரும் கடந்த ஜூலை மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். கடந்த 2 சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் அவர். அந்த 2 சீசன்களிலுமே லக்னோ அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார் ஆண்டி.

Andy Flower

அவர் பயிற்சியாளராக பணியாற்றிய அனைத்து இடங்களிலுமே நல்ல ரெக்கார்டுகள் வைத்திருக்கிறார். இவர் இங்கிலாந்து அணியின் டீம் டைரக்டராக இருந்தபோது அந்த அணி பெரும் எழுச்சியை சந்தித்தது. இங்கிலாந்தில் நடந்த 2009 ஆஷஸை வென்ற அந்த அணி, 2010ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றது. அதைவிட மிகப் பெரிய சாதனையாக 2010/11 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று அசத்தியது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியது.

டி20 அரங்கில் பல அணிகளோடு கோப்பை வென்றிருக்கிறார் அவர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான் அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார் அவர். ILT20 தொடரில் கல்ஃப் ஜெயின்ட்ஸ் அணியும், தி 100 (ஆண்கள்) தொடரில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணியும் இவர் தலைமையில் கோப்பை வென்றிருக்கின்றன. கரீபியன் பிரீமியர் லீகில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை இரண்டு முறை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஆண்டி ஃபிளவர். அந்த அணியில் தற்போதைய RCB கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸியோடு அவர் பணியாற்றியிருக்கிறார். அதனால், நிச்சயம் அவருக்கு ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது ஓரளவு எளிதாகவே இருக்கும்.

Andy Flower

தலைமைப் பயிற்சியாளர் மாற்றம் அடைந்திருக்கும் நிலையில், மற்ற பொறுப்புகளில் மாற்றம் நடக்குமா என்ன என்பதைப் பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது ஆடம் கிரிஃபித்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளரா செயல்பட்டுவருகிறார். போக ஶ்ரீதரன் ஶ்ரீராம் (பேட்டிங் மற்றும் ஸ்பின் பௌலிங் ஆலோசகர்), மலோலன் ரங்கராஜன் (ஸ்கௌட்டிங் ஹெட் மற்றும் ஃபீல்டிங் கோச்) என இரு முன்னாள் தமிழக வீரர்களும் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆண்டி ஃபிளவர் அவர்களுடனே தொடர்வாரா இல்லை தனக்கான புதிய அணியை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.