2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றதற்கு பிறகு, மூத்தவீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நீண்ட இடைவெளி எடுக்க முடிவுசெய்துள்ளனர். ஓய்வு முடிந்து நடப்பாண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குதான் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை மனதில் வைத்து இலங்கைக்கு எதிரான ODI தொடருக்கு மூத்த வீரர்கள் திரும்ப வேண்டும் என புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறும் மெகா தொடருக்கு முன் இந்தியா வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவிருக்கும் நிலையில், அதை மனதில் வைத்து கவுதம் கம்பீர் மூத்த வீரர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்.
குறிப்பாக தொடருக்குப் பிறகு அவர்களுக்கு பெரிய இடைவெளி கிடைக்கும் நிலையில், கம்பீர் கோரிக்கை நியாமனாதாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் கவுதம் கம்பீரின் துணை ஊழியர்கள் குழு நியமனம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படாத நிலையில், இலங்கைக்கு எதிரான அணியை தேர்ந்தெடுப்பதிலும் தாமதம் நீடித்துவருகிறது.
இதற்கிடையில் ரோகித் சர்மா குழம்பங்களுக்கு மத்தியில் ஒருநாள் தொடருக்கு இந்திய அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் இறுதியில் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை செல்வதற்கு முன்பு இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ஓய்வை தொடருவார்கள் எனவும் கூறப்படுகிறது.
Cricbuzz வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு திரும்பும் மனநிலையில் இருக்கிறார். ஆனாலும் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிசெய்யவில்லை, ஒருவேளை ரோகித் சர்மா அணிக்கு திரும்பினால் சந்தேகத்திற்கு இடமின்றி அணியை வழிநடத்துவார். ஒருவேளை அவ்வாறு செய்யவில்லை என்றால், மூத்த வீரர் KL ராகுல் ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார். மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா கிடைக்காத நிலையில் டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கும் எண்ணத்தில் தேர்வுக்குழு இருந்துவருகிறது. இருப்பினும் தேர்வுக்குழுவுக்கு சூர்யாவின் உடற்தகுதி மீது சந்தேகம் உள்ளது மற்றும் பணிச்சுமை நிர்வாகத்தை மனதில் வைத்து முடிவுஎடுக்க வேண்டிய சூழல் இருந்துவருகிறது.
பிசிசிஐ இன்னும் கம்பீரின் ஆதரவு ஊழியர்களை இறுதி செய்யாத நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான குழு இறுதிசெய்து முடிவெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருந்துவருகிறது.