நீண்டகால போராட்டத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சர்பராஸ் கான், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அறிமுக இன்னிங்ஸில் இன்று களமிறங்கினார்.
கேப்டன் ரோகித் சர்மாவின் 131 ரன்கள் ஆட்டத்திற்கு பிறகு களமிறங்கிய சர்பராஸ் கான், ”அவன் கண்ணுல பயமில்ல” என்பது போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஞ்சிக்கோப்பையில் விளையாடி விளையாடி இந்தியாவின் எந்த மைதானத்திலும் எப்படி ரன்களை குவிக்க வேண்டும் என தெரிந்து வைத்திருந்த சர்ஃபராஸ் கான், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்வீப், லேட் கட், ஸ்டிரைட் ஹிட், ஸ்லாக் ஸ்வீப் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஓவருக்கு ஒரு பவுண்டரி என சர்பராஸ் விரட்டிக்கொண்டே இருக்க, ரன்கள் வந்த வண்ணமே இருந்தன. ஜடேஜா 92 ரன்கள் இருந்த போது 16 ரன்களில் இருந்த சர்ஃபராஸ், அவர் 96 ரன்கள் அடிப்பதற்குள் 49 ரன்கள் விளாசினார். சர்பராஸ் கானின் ஆட்டத்தை சமாளிக்கவே முடியாத இங்கிலாந்து பவுலர்கள், பவுண்டரிகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் முழித்தனர்.
9 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய சர்பராஸ் அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே குறைவான பந்துகளில் அரைசதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 42 பந்துகளில் யுவராஜ் ஆப் பாட்டியாலா அந்தசாதனையை படைத்திருக்க, 48 பந்துகளில் ஹர்திக் பாண்டியாவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் சர்பராஸ் கான்.
சர்பராஸ் கானின் அதிரடியான ஆட்டத்தை கண்ட இந்திய அணி வீரர்கள், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சர்ஃபராஸ் தந்தை மற்றும் மனைவி என அனைவரும் எழுந்து நின்று உற்சாகம் அளித்தனர். ஆனால் அனைத்தும் சிறிது நேரத்திலேயே மறைந்து போனது.
82வது ஓவரை ஆண்டர்சன் வீச, 99 ரன்களில் பந்தை சந்தித்தார் ஜடேஜா. சதமடிக்கும் வாய்ப்புக்காக ஆவலாக இருந்த ரவிந்திர ஜடேஜா 81.5-வது ஓவரில் ஃபீல்டரிடமே பந்தை அடித்துவிட்டு சிங்கிளுக்கு அழைக்க, நான்-ஸ்டிரைக்கில் இருந்த சர்பராஸ் கான் முழு ரன்னுக்கும் கமிட்டானார். ஆனால் ஜடேஜா ரன்னிலிருந்து பின்வாங்க, சர்ஃபராஸ் கான் திரும்பி செல்வதற்குள் ஸ்டம்பை தகர்த்தார் மார்க் வுட்.
ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ், 62 ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி வெளியேறினார். சர்ஃபராஸ் கான் ரன்அவுட்டை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா, கோவத்தில் தன்னுடைய தொப்பியை கழட்டி தூர எறிந்தார். ஒரு அற்புதமான இன்னிங்ஸ் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்ததை ரோகித் சர்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் கோவப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.