ரோகித் சர்மா web
கிரிக்கெட்

“இதனால்தான் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றேன்..” இந்திய அணிக்காக ரோகித் சர்மா பகிர்ந்த சுவாரசியம்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பையை எப்படியும் இந்தியா வென்றுவிடும் என்ற நம்பிக்கையை இறுதிப்போட்டிவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வைத்திருந்தனர். ஆனால் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்திய அணியின் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்தது.

அதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாகவும், 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்று விளையாட மாட்டார்கள் எனவும் செய்திகள் வெளியாகின. விரக்தியடைந்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பயிற்சியாளர் பதவியை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

virat kohli - rohit sharma

ஆனால் ரோகித்சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் மூன்றுபேரும் நம்பிக்கையை இழந்துவிடாமல் 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற முடிவோடு களம்கண்டனர். இறுதிப்போட்டியில் 30 பந்துக்கு 30 ரன்கள் என்ற நிலைமையில் திடமாக நின்ற இந்திய வீரர்கள், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு குழுவாக கோப்பையை வென்று மகுடம் சூடினர்.

கோப்பைகள் வெல்வதை நிறுத்தப்போவதில்லை..

டி20 உலகக்கோப்பை வென்றபிறகு 2024 CEAT கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ரோகித் சர்மா, ஆண்களுக்கான ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றார். விருதுக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, 5 ஐபிஎல் கோப்பைகளை ஏன் வென்றேன் என்றும், இந்தியாவிற்காக இனிவரும் கோப்பைகளை வெல்வதை நிறுத்தப்போவதில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.

rohit sharma

நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோகித் சர்மா பேசுகையில், “நான் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் கோப்பைகள் வெல்வதை நிறுத்தப் போவதில்லை, ஏனென்றால் உங்களுக்கு போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்லும் சுவை கிடைத்துவிட்டால், அதை மீண்டும் மீண்டும் வெல்ல நினைப்பீர்கள், நிறுத்த விரும்ப மாட்டீர்கள். இனிவரும் தொடர்களில் ஒரு அணியாக நாங்கள் எங்களை தள்ளுவோம். எதிர்காலத்தில் சிறந்த விஷயங்களை கைப்பற்ற பாடுபடுவோம்" என்று ரோகித் கூறினார்.

மேலும் கோப்பை வெல்ல காரணமாக இருந்த 3 தூண்களை பாராட்டிய அவர், “புள்ளிவிவரங்கள் மற்றும் மைல்கற்களை பற்றி யோசிக்காமல் சிறப்பாக செயல்படும் ஒரு அணியாக இந்திய அணியை மாற்றவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. எதைப்பற்றியும் அதிகம் யோசிக்காமல் வெளியே சென்று சுதந்திரமாக விளையாடக்கூடிய சூழலை அணியில் உருவாக்குவதை உறுதிசெய்கிறோம். அதுதான் எங்களுக்கு எப்போதும் தேவை. அதை அணியில் நிறைவேற்ற எனது மூன்று தூண்களான “ ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வாளர்களின் தலைவர் அஜித் அகர்கர்” ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது” என்று மூன்று பேரையும் பாராட்டினார்.