கெய்ல், ரோகித் சர்மா ட்விட்டர்
கிரிக்கெட்

’நம் இருவருக்கும் பிடித்தது 6 தான்’ - கெய்லுக்கு நன்றி தெரிவித்து ரோகித் சர்மா பதிவு!

கெய்ல் படைத்த சாதனைகளில், தாம் ஒன்றை மட்டுமே செய்துள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று (அக்.11) டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சதம் அடித்ததுடன் ஒருசில புதிய சாதனைகளையும் படைத்தார்.

ரோகித் சர்மா

குறிப்பாக, சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறினார். நேற்றைய போட்டியில் ரோகித், 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம், 556 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்தார். இதற்கு முன்பு, 553 சிக்சர்கள் அடித்து இருந்த க்றிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளினார்.

இதையும் படிக்க; பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களமிறங்குவாரா?

இந்த சாதனை குறித்து ரோகித் சர்மா, “கெய்ல் யுனிவர்சல் பாஸ். அவர், எங்கு எந்த மைதானத்தில் ஆடினாலும் சிக்சர் அடிக்கும் இயந்திரமாகக் கலக்கியிருக்கிறார். இப்போது அவரின் சாதனை புத்தகத்திலிருந்து ஒரு சாதனையையே நான் பறித்திருக்கிறேன். பரவாயில்லை, எங்கள் இருவரின் ஜெர்சி நம்பருமே 45-தான். 45 என்கிற நம்பர்தான் அந்தச் சாதனையை செய்திருக்கிறது என கெய்ல் மகிழ்ச்சியடைந்து கொள்வார்.

நான் கிரிக்கெட் ஆட தொடங்கியபோது இப்படியான சிக்சர்களை அடிப்பேன் என்றே நினைத்தில்லை. இத்தனை ஆண்டுகளாக கடினமாக உழைத்ததன் பலன் அது. நான் இதிலெல்லாம் திருப்திப்பட்டுக் கொள்ளும் ஆள் இல்லை. சிறப்பானவற்றை வருங்காலத்திலும் தொடர்ந்து செய்வதிலேயே என் கவனம் முழுவதும் இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தம்முடைய சிக்சர் சாதனையை முறியடித்ததற்கு கெய்ல், ரோகித் சர்மாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதற்கு ரோகித் சர்மா, நன்றி தெரிவித்துள்ளதுடன், ‘தம் இருவருடைய ஜெர்சியின் பின்புறத்திலும் 4எ&5 என்ற எண்கள்தான் இருக்கும். ஆனால் தம் இருவருக்கும் பிடித்தது 6 தான்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ’குழந்தையைக் கொல்ல முடியாது’ - 26 வார கரு விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!