இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு சூப்பர் ஸ்டார் பேட்டர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்த ஆண்டில் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய டி20 அணி பயணிப்பதால் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வில் அனுப்பப்படுகின்றனர். ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி போன்ற சில மூத்த வீரர்களுக்கும் இதே நிலைதான்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரோகித்திடம் டி20 போட்டிகளில் நீங்களும் விராட் கோலியும் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, “கடந்த ஆண்டும் நாங்கள் இதை தான் செய்தோம். அதாவது டி20 உலகக் கோப்பை இருந்ததால் நாங்கள் பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. தற்போதும் அதையே நாங்கள் மீண்டும் செய்கிறோம். அதாவது ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறுவதால் நாங்கள் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. நீங்கள் அனைத்து போட்டிகளையும் விளையாடாமல் உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தோம்.
மேலும் எங்களைப் போலவே டி20 போட்டிகளில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? உங்களுடைய கவனத்தை நான் புரிந்து கொள்கிறேன். இங்கே ஜடேஜா விளையாடாத போதிலும் யாரும் கேட்பதில்லை. மேலும் உண்மையாக நான் உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே அந்த கனவை வெல்வதற்காக போராடுவதை விட எனக்கு வேறு சந்தோஷம் இருக்க முடியாது. மேலும் உலகக் கோப்பையை கைப்பற்ற கடினமாக உழைக்க வேண்டும். அதைத் தான் 2011 முதல் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினார்.