ரோகித் சர்மா web
கிரிக்கெட்

’நாங்க வேற நெனச்சோம்; அனைத்தும் எனது தவறான முடிவு’ - 46 ரன் சரிவு குறித்து ரோகித் கொடுத்த விளக்கம்

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தக்கவைத்துக்கொள்வதற்கான தொடர் என்பதால் இந்தியா நிச்சயம் வென்று ஆதிக்கம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

பல முன்னாள் வீரர்கள் இந்தியா 3-0 என நியூசிலாந்தை வீழ்த்தும் என கூறியிருந்தனர். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முடிவை தேர்ந்தெடுப்பதில் தவறுசெய்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு சாதகமான ஒரு பிட்ச் கண்டிசனை அவர்கள் கையில் கொடுத்து இந்தியாவை மிக மோசமான நிலைமைக்கு தள்ளினார்.

ind vs nz

முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 5 வீரர்கள் 0 ரன்கள், 4 வீரர்கள் ஓரிலக்க ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மாட் ஹென்றி இந்தியாவை 46 ரன்னுக்கு ஆல்அவுட் என்ற மோசமான ரன்னில் சுருட்டினார்.

46 ரன்னுக்கு என்ன காரணம்? ரோகித் பேசியது என்ன?

இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், நியூசிலாந்து அணி 180/ 3 என்ற நிலையில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் குறித்து செய்தியாளர்கள் பேசிய ரோகித் சர்மா, “முதல் செஸ்ஸனுக்கு பிறகு ஆடுகளம் சீமர்களுக்கு அதிகம் உதவாது என்று நாங்கள் நினைத்தோம். அங்கு அதிகம் புல் இல்லை, அதனால் பெரிய மாற்றம் இல்லாமல் தட்டையாகவே தொடரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இது அனைத்தும் என் தரப்பிலான தவறான முடிவு, ஆடுகளத்தை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை.

எல்லாவற்றிற்கும் மாறாக ஆடுகளத்தில் சீமர்களுக்கு உதவியிருந்ததால், இப்போது நாங்கள் 46 ரன்கள் என்ற மோசமான நிலைமையில் ஆட்டமிழந்துள்ளோம். ஷாட் தேர்வு குறித்து நீங்கள் குற்றம் கூறலாம், ஆனால் சில சமயங்களில் நீங்கள் ஏதாவது செய்யத் திட்டமிட்டாலும் அதைச் செயல்படுத்தத் தவறிவிடுவீர்கள். எனவே, இது எங்களுக்கு ஒரு மோசமான நாள். 46 என்ற ரன்களை போர்டில் பார்க்கும்போது ஒரு கேப்டனாக எனக்கே மிகவும் வருத்தமாக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

கேஎல் ராகுல் நம்பர் 3 வந்திருக்க வேண்டுமா? கோலியின் பொறுப்பு என்ன?

சுப்மன் கில் அணியில் இல்லாத நிலையில், நம்பர் 3 பொசிஷனானது நிச்சயம் கேஎல் ராகுலுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ரசிகர்கள் முன்வைத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் விராட் கோலி 3வது வீரராக வந்து பூஜ்ஜியம் ரன்னிற்கு வெளியேறிய பிறகு, அவரைத்தொடர்ந்து சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களத்திற்கு வந்தனர், கேஎல் ராகுல் 6வது வீரராகவே வந்து விளையாடினார்.

கேஎல் ராகுல்

இந்நிலையில் டாப் ஆர்டரில் சிறந்த எண்களை வைத்திருக்கும் கேஎல் ராகுல் ஏன் முன்னதாகவே இறங்கவில்லை என்பதற்கு விளக்கமளித்த ரோகித் சர்மா, “நாங்கள் கேஎல் ராகுலின் பேட்டிங் நிலையை அதிகம் மாற்ற விரும்பவில்லை. அவர் 6வது வீரர் என்ற ஒரு இடத்தை பிடித்துள்ளார், எனவே அவருக்கு அங்கேயே கயிறு கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைத்தோம். சர்ஃபராஸ் கானுக்கும் அப்படித்தான் நினைத்தோம், அவருக்கான ஒரு இடத்தை சீல் செய்ய நினைத்தோம். இவை அனைத்தையும் தாண்டி 3வது பொஷிசன் மிகவும் முக்கியமான இடம் என்பதால் அதற்கு விராட் கோலி பொறுப்பேற்க விரும்பினார். நாங்கள் விவாதித்தோம், அவர் நன்றாக இருந்தார். வீரர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி” என்று ரோகித் விளக்கினார்.