பும்ரா, அஸ்வின், கோலி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை | முதலிடத்துக்கு முன்னேறிய பும்ரா.. கீழிறங்கிய அஸ்வின்.. Top10 இடத்துக்குள் கோலி!

ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா, முதல் இடத்திற்கு முன்னேறினார்.

Prakash J

வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு நம்பிக்கையுடன் வந்த வங்கதேச அணி, இந்திய அணியிடம் வாஷ் அவுட் என்ற கணக்கில் (2-0) தொடரை இழந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட பலரும் சிறப்பாக விளையாடினர். இதையடுத்து, ஐசிசி தரவரிசையில் பேட்டர்கள் மற்றும் பவுலர்களின் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அ

பேட்டர்கள் தரவரிசை

ஐசிசி பேட்டர்கள் தரவரிசை

அந்த வகையில் பேட்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டும், 2வது இடத்தை நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் தக்கவைத்துள்ளனர். 3வது இடத்துக்கு இந்திய அணியின் இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார். அவர் வங்கதேசத்துக்கு எதிரான 2வது போட்டியில் 2 அரைசதங்கள் விளாசியதன் மூலம், 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டாப் 10இல் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். பின் அவர் 2வது டெஸ்ட் போட்டியில் 47 மற்றும் 29* என்று ரன்கள் சேர்த்ததால், மீண்டும் டாப் 10க்குள் வந்துள்ளார். 12வது இடத்தில் இருந்த விராட் கோலி, மொத்தமாக 6 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

அதேநேரத்தில், முதல் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் 10வது இடத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, 5 இடங்கள் கீழே தள்ளப்பட்டு, 15வது இடத்தில் இருக்கிறார். அதாவது முதல் 10 ப்ளேயர்கள் வரிசையில் ரோஹித் சர்மா இல்லை. அதேபோல் இலங்கை அணியின் வளரும் நட்சத்திரமான கமிண்டு மெண்டிஸ் 11வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

பவுலர்கள் தரவரிசை

ஐசிசி பவுலர்கள் தரவரிசை

பவுலர்களை தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் நம்பர் 1 இடத்தில் இருந்து சரிவைச் சந்தித்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், பும்ரா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் 870 புள்ளிகளுடன் பும்ரா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் 1 புள்ளிகள் வித்தியாசத்தில் 869 புள்ளிகளுடன் அஸ்வின் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க: ”அவரை திருத்துவதற்கு வாய்ப்பில்லை..”|தாயைக் கொன்று உடலை வறுத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு மரண தண்டனை!