ரோகித் சர்மா, ரிங்கு சிங் ட்விட்டர்
கிரிக்கெட்

டி20-ல் 5-வது சதமடித்த ரோகித்: கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் பறக்கவிட்ட ரிங்கு சிங்.. அலறிய ஆப்கான்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவும், ரிங்கு சிங்கும் கதகளம் நடத்தியதில் இந்திய அணி 212 ரன்களைக் குவித்தது.

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி தொடக்க பேட்டர்களாக ரோகித்தும் ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.

இதையும் படிக்க: NZ Vs PAK T20: பேட் இல்லாமல் ஓடிய முகமது ரிஸ்வான்.. 1 ரன் மட்டுமே கொடுத்த நடுவர்.. வைரல் வீடியோ!

இதனால் இந்திய அணியின் ரன்ரேட் வேகம் குறைந்ததுடன், ஒருகட்டத்தில் இந்திய அணி 150 ரன்களைக் கடக்குமா என்ற நிலையில் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் கவலை ரிங்கு சிங் களமிறங்கியபின் தீர்க்கப்பட்டது. ரோகித் மற்றும் ரிங்கு சிங் பொறுப்புணர்ந்து விளையாடியபோதும், பந்துகளை முயன்ற அளவுக்கு அடித்து ஆடினர். ஆனால், அனைத்தும் பீல்டர் வசம் சென்று கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் ஆமைவேக ரன்களுடன் அரைசதத்தைக் கடந்தார் ரோகித். இதற்கிடையே ரிங்கு சிங்கிற்கு எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கேட்கப்பட்டது.

ஆனால், டிவி ரீப்ளேயில் அவர் அவுட் இல்லை என தெரியவந்தது. இதற்குப் பின்பே ஆட்டத்தில் சூடு பறந்தது. அதிலும் ரோகித் சர்மா, பேட்டை மாற்றியபின்பு ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களைப் புரட்டி எடுத்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவருடைய ஆட்டத்தில் அனல் பறந்ததைக் கண்டு ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். அந்த உற்சாகம் குறையாமல் அவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினார். குறிப்பாக, 15 ஓவர்களுக்குப் பிறகு அணியின் எண்ணிக்கை உயர்ந்ததுடன், ரோகித் சர்மாவும் டி20-யில் 5-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இதற்குமுன்பு சூர்யகுமார் யாதவ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தலா 4 சதங்களுடன் இருந்த ரோகித் சர்மா, இன்று சதமடித்ததன் மூலம் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்குள்ளானார். தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இதுவே அதிகபட்ச ரன்கள் ஆகும். அவர் இதற்கு முன்பு 2017-ல் இலங்கைக்கு எதிராக 118 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற அவர், 69 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் கடைசி நேரத்திலும் பதற்றமின்றி ஆடும் ரிங்கு சிங்கும் அரைசதம் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். அவர் கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததுடன், ஆப்கானிஸ்தான் பவுலர்களையும் வாய்பிளக்க வைத்தார்.

இதையும் படிக்க: Aus Vs Wi Test: 85 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக டெஸ்டில் சாதித்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

இன்றைய போட்டியின் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதில் ரோகித் 2 சிக்சர்கள் அடித்திருந்தார். மொத்தத்தில் அந்த ஓவரில் மட்டும் 36 ரன்கள் வந்தன. அதற்கு முந்தைய ஓவரிலும் 22 ரன்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங்கும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அகமது 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் கரீம் ஜனத் 3 ஓவர்களை வீசி 54 ரன்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா சதம் கண்டதன்மூலம் ஒருசில சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் டி20-யில் அதிக சதம் அடித்திருக்கும் ரோகித், டி20-யில் அதிக ரன்கள் (121) அடித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சுப்மன் கில் (126) முதல் இடத்திலும், ருத்ராஜ் கெய்க்வாட் (123), 2-வது இடத்திலும், விராட் கோலி (122) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த 4 வீரர்களுமே இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பதுதான் இன்னும் சிறப்பு. அடுத்து டி20-யில் எந்த விக்கெட் இழப்புக்குப் பிறகு அதிக ரன்களை அடித்த ஜோடியாகவும் ரோகித் - ரிங்கு சிங் இணைந்துள்ளது. அந்த இணை இன்றைய போட்டியில் 190 ரன்களை எடுத்துள்ளது. இதற்குமுன்பு 2022-இல் சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா எடுத்த 176 ரன்களே சாதனையாக இருந்தது. அதுபோல் டி20யில் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்த பட்டியலிலும் இந்த ஜோடி (ரோகித் - ரிங்கு சிங்) இணைந்துள்ளது. இதற்குமுன்பு 2007இல் யுவராஜ் சிங்கும் 2021இல் பொல்லார்டும் ஒரே ஓவரில் 36 ரன்களை எடுத்திருந்தனர். ஆனால், இன்றைய போட்டியில் கடைசி ஓவரில் ரோகித் மற்றும் ரிங்கு ஆகியோர் இணைந்து 36 ரன்கள் எடுத்துள்ளனர். அதுபோல் டி20 போட்டிகளில் ஒரு கேப்டனாகவும் அதிக சிக்ஸர்களை (90) எடுத்துள்ளார் ரோகித்.

தற்போது மிகக் கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: NZ Vs PAK T20: ஒரே போட்டியில் சாதித்த நியூசி. வீரர்... மோசமான சாதனை பட்டியலில் இணைந்த பாகி. பவுலர்!