கபில் தேவ் - தோனி - ரோகித் ஷர்மா புதிய தலைமுறை
கிரிக்கெட்

உலகக்கோப்பையை வென்ற மும்மூர்த்திகள்... பல கோடி இந்தியர்களின் கனவை நிஜமாக்கிய சூப்பர்ஹீரோக்கள்!

இந்திய அணிக்காக கடந்த காலங்களில் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ், தோனி வரிசையில் தற்போது ரோகித் சர்மா இணைந்துள்ளார். இவர்கள் மூன்று பேரின் உலகக்கோப்பை பயணத்தை தற்போது பார்க்கலாம்....

PT WEB

1983, ஜூன் 25.

இந்திய அணி முதல் உலகக்கோப்பை வென்ற நாள்

41 ஆண்டுகளாகிவிட்டன. ஹாக்கியை தவிர்த்து எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியாது என்று நினைத்த இந்திய மக்களுக்கு, கிரிக்கெட்டிலும் இந்தியாவல் சாதிக்க முடியும் என்று கபில் தேவ் தலைமையிலான இந்திய வீரர்கள் நிரூபித்து காட்டினர்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய வீரர்கள் - 1983 உலகக்கோப்பை

சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வளர்ச்சி பெறுவதற்கு அந்தப் போட்டிதான் மிக முக்கிய காரணம். 1983 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஈஸ்ட் ஆப்பிரிக்கா என்ற அணியை மட்டுமே முதலில் வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி பற்றிய அச்சமோ, கவலையோ வேறு எந்த அணிகளுக்கும் இருக்கவில்லை. ஆனால்,

கபில் தேவ் என்ற போராட்ட நாயகன் அனைத்தையும் மாற்றிக் காட்டினார்.
1983 உலகக்கோப்பை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 184 ரன்களை இலக்கை நிர்ணயித்துவிட்டு, நம்மால் வெல்ல முடியும் என்று சொல்வதற்கு எந்த கேப்டனுக்கு தைரியம் வரும்? ஆனால், கபில் தேவ் சொன்னதோடு செய்தும் காட்டினார்.!

அப்போது நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் 60 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக விளையாடப்பட்டது. இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட 3 ரன் ரேட்டில் விளையாடினாலே மேற்கிந்திய தீவுகள் வென்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது பல்விந்தர் சிங் தொடங்கிய விக்கெட் வேட்டையை, அமர்நாத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் அன்றைய நாளின் மிரட்டல் நாயகன் மதன் லால்தான்.

மதன் லால்

மதன் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார் ரிச்சர்ட்ஸ். அதில் இருந்து மீண்டு வந்த மதன் லால் ரிச்சர்ட்ஸ், கோம்ஸ் என்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இறுதியாக 43 ரன்கள் வித்தியாசத்தில் 2 முறை உலகக்கோப்பை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இதையடுத்து

2007

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு நிகழ்ந்த ஆண்டாகும்.

டி20 உலகக்கோப்பை விளையாட இந்திய அணி, தென்னப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி டிராவிட், சச்சின், கங்குலி போன்ற வீரர்கள் விலகி கொண்டனர். இதனால் தோனியை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது. யூசுப் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா என்ற புதிய வீரர்களுடனும், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் என்ற சில அனுபவ வீரர்களுடனும் தென்னாப்பிரிக்கா சென்றது தோனி தலைமையிலான படை.

2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி

இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியபோது, இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவால் வெற்றி பெற முடியாது என்று பிரபல இதழில் தலையங்கமே எழுதினார். ஆனால் யுவராஜ் சிங்கின் அதிரடி, ஸ்ரீசாந்த் ஸ்விங், ஹர்பஜன் சிங்கின் சுழல் என்று இந்திய அணி அடித்த அடி, சிட்னியில் எதிரொலித்தது. இதையடுத்து இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார் தோனி. அன்றையப் போட்டியில் வெற்றிபெற்ற பின் தோனி நேரடியாக சென்று, "WE PROVED YOU WRONG" என்று பதில் அளித்தார்.

INDIA LIFTED THE WORLD CUP AFTER 28 YEARS.. DHONI FINISHES OF HIS STYLE

என்ற இந்த வசனத்தை எந்த இந்தியராலும் மறக்க முடியாது. 1983ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்திய அணியை பல்வேறு கேப்டன்கள் வழிநடத்தினாலும் உலக கோப்பை வெல்வது வெறும் கனவாகவே இருந்தது.

2011

இந்நிலையில்தான் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, அந்த கனவை நனவாக்கி மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி புதிய சரித்திரம் படைத்தது.

உலகக்கோப்பையுடன் தோனி

2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில் இலங்கை அணி நிர்ணயத்த 275 ரன்களை, 48.2 ஓவர்களில் கடந்து கோப்பையை வென்றது. இதில் தோனி அடித்த கடைசி சிக்ஸ்ர், 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு காரணமாக அமைந்தது. 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கபில் தேவ் பிடித்த கேட்ச் எப்படியொரு மகத்தான தருணமோ, அதே போல் தோனி அடித்த சிக்சரும் சிறந்த தருணமாகும்.

2024

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது இந்திய அணி. கபில் தேவுக்கும், தோனிக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்கள் வரிசையில் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார் ரோகித் சர்மா. 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார் ரோகித் சர்மா.

2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடங்கியது முதல், தற்போது நடைபெற்று முடிந்த தொடர் வரை அனைத்து டி20 உலகக்கோப்பையிலும் விளையாடிய ஒரே வீரர் ரோகித் சர்மாதான். 2007 பிறகு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எப்போது வெல்லும் என ஏக்கத்தில் இருந்த ரசிகர்களை, தற்போது மகிழ்ச்சியடைய வைத்துள்ளார் ரோகித். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இனி ரோஹித்தின் பெயரும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும்.