rohit sharma pt web
கிரிக்கெட்

ஹிட்மேனின் அடுத்தடுத்த HIT-கள்.. டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம்.. சச்சின் சாதனை தகர்ப்பு!

Angeshwar G

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி டை ஆன நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முதலிடத்தில் யார்

பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடித்து ஆடிய ரோகித் சர்மா 64 ரன்களை எடுத்து வெளியேறினார். ஆனாலும் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

முதலாவதாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில், டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி ரோகித் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலித்தில், சச்சின் 18426 (452 இன்னிங்ஸ்) ரன்கள் எடுத்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி 13872* (281 இன்னிங்ஸ்) ரன்களுடனும், கங்குலி 11221 (297 இன்னிங்ஸ்) ரன்களுடனும், ரோகித் 10831* (256 இன்னிங்ஸ்) ரன்களுடனும், டிராவிட் 10768 (314 இன்னிங்ஸ்) ரன்களுடனும், தோனி 10599 (294 இன்னிங்ஸ்) ரன்களுடனும் உள்ளனர்.

2023க்குப் பின் முதல் 10 ஓவர்களில் அதிக சிக்சர்கள்

இன்றைய போட்டிக்கு முன்பு ரோகித் 10767 ரன்களை எடுத்திருந்த நிலையில், இன்றைக்கு எடுத்த 64 ரன்களுடன் மொத்தமாக 10831 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம், ரோகித்சர்மா இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை எடுத்தவர்களது பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போதுவரை, முதல் 10 ஓவர்களுக்குள் 50 சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம், 2023 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின் தற்போதுவரை, முதல் பத்து ஓவர்களுக்குள் 53 சிக்சர்களை விளாசியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா தொடக்க வீரராக 43 சதங்களையும், 78 அரைசதங்களையும் அடித்துள்ளார். மொத்தமாக 121 முறை 50+ ரன்களை தொடக்க வீரராக எடுத்துள்ளார். இதன் மூலம் தொடக்க வீரராக 120 முறை 50+ ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை கடந்தார்..

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிய போது அடுத்து வந்தவர்கள் சொதப்பியதால் இந்திய அணி தடுமாறியது. 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 10 ஓவர்களில் 41 ரன்கள் தேவை. இரண்டு விக்கெட் மட்டுமே மீதமுள்ளது.