rishabh pant web
கிரிக்கெட்

’பையா நான் நடிச்சன்..’ டி20 உலகக்கோப்பையில் போலியான காயம்; உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்! நடந்தது என்ன?

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 30 பந்துகளுக்கு 30 ரன்கள் என்ற நிலை இருந்தது. பந்துவீச்சாளர்களை யோசிக்க விடாமல் க்ளாசன் சிக்சர்களாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துகொண்டிருந்தார். வேகமாக போட்டி தென்னாப்பிரிக்காவின் பக்கம் சென்றது.

pant

ஆனால் சரியான நேரத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட, பிசியோ மைதானத்திற்குள் ஓடிவந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு போட்டி தொடங்கிய போது ஹர்திக் பாண்டியா வீசிய ஸ்லோயர் டெலிவரியை கணிக்காமல் க்ளாசன் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட்டின் காயத்தால் ஏற்பட்ட சிறிய இடைவெளி போட்டியில் இந்தியா திரும்பி வர காரணமாக இருந்தது.

இந்நிலையில் அப்போது ஏற்பட்ட காயம் போலியானது என்றும், ரோகித் சர்மா என்னிடம் வந்து உன் கால் எப்படி இருக்கிறது என்று கேட்டார், பையா நான் நடித்துக்கொண்டிருந்தேன் என்று கூறினேன் என பண்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பிரேக் இந்தியாவிற்கு தேவைப்பட்டது..

சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் போலியான காயம் குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா, “தென்னாப்பிரிக்காவிற்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​அதற்கு சற்று முன், ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது. பண்ட் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஆட்டத்தை இடைநிறுத்தினார் - அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது, அதனால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இது ஆட்டத்தை மெதுவாக்க உதவியது. ஏனெனில் ஆட்டம் வேகமானதாக இருந்தது, அந்த நேரத்தில் பந்து வீச்சாளர் விரைவாக வீச வேண்டும் என்று விரும்பினர். சரியான நேரத்தில் களத்திற்குள் பிசியோதெரபிஸ்ட் வந்து சிறிது நேரம் கடத்தினார், கிளாசன் மீண்டும் போட்டி தொடங்கும் வரை காத்திருந்தார். போட்டியை திருப்பியது அது ஒன்றுதான் என்று நான் கூறவில்லை, ஆனால் பண்ட் தனது சாதுர்யத்தை பயன்படுத்திக் கொண்டது எங்களுக்கு சாதகமாக மாறியது"என்று 'தி கபில் சர்மா ஷோ' நிகழ்ச்சியின் போது ரோகித் வெளிப்படுத்தினார்.

pant

இந்நிலையில் போலியான காயம் குறித்து வெளிப்படுத்தியிருக்கும் பண்ட், “நான் இதை செய்யலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் திடீரென்று போட்டி வேகமாக மாறியது. நிறைய ரன்கள் இருந்தன, ஆனால் 2-3 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. அப்போது ‘நீங்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இந்த தருணம் மீண்டும் எப்போது வரும் என்று உங்களுக்கு தெரியாது. இதை செய்யலாம் என முடிவெடுத்தேன். அதனால் நான் பிசியோவிடம் கூறினேன் நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நேரத்தை வீணாக்குங்கள்” என்று தெரிவித்ததாக பண்ட் வெளிப்படுத்தினார்.

மேலும் ரோகித் சர்மாவிடம் பேசியது குறித்து பகிர்ந்த அவர், “என் முழங்கால் நன்றாக இருக்கிறதா என்று ரோஹித் பாய் என்னிடம் வந்து கேட்டார். கேட்டபோது, ​​பையா நான் இவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்தேன் என்றேன். சில சமயங்களில் போட்டிகளில் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் இது வேலை செய்யும் என்று நான் கூறவில்லை, ஆனால் அது சில சமயங்களில் வேலை செய்யும், அதுபோலான ஒரு தருணத்தில் அது வேலை செய்தால், அதைவிட சிறந்தது நமக்கு எதுவும் இல்லை” என்று பண்ட் கூறினார்.