rishabh pant web
கிரிக்கெட்

’இனி அவர் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான்..’ சதமடித்து உலகத்தின் கூற்றை மாற்றிய ரிஷப் பண்ட்!

மிகப்பெரிய கார் விபத்திற்கு பிறகு மீண்டு வந்து வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.

Rishan Vengai

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பண்ட் சென்ற கார் மிகப்பெரிய விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட ஒருவருட காலமாக ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் கூட பங்கேற்காத நிலையில், 15 மாதங்கள் கழித்து 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை இனி அவ்வளவு தான், இனி அவரால் பழையபடியான அதிரடி ஆட்டத்தை விளையாடவே முடியாது” என்ற கூற்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் அவருடைய விபத்தை பார்த்த அவருக்கு கூட அதே எண்ணங்கள்தான் தோன்றியிருக்கும். ஆனால் நம்பிக்கையை கைவிடாத ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல்நலத்தை முன்னேற்றியதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய மனதிடத்தையும் மெருகேற்றி களத்திற்கு திரும்பினார். வலைப்பயிற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பழைய பேட்டிங்கை திரும்பக் கொண்டுவந்த பண்ட், 2024 ஐபிஎல் தொடருக்கு களம்கண்டார்.

2024 ஐபிஎல் தொடரில் விளையாடியபோது, அவர் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறிது கடினப்படுவதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் 2024 ஐபிஎல் தொடர் முடியும் போது, ரிஷப் பண்ட்டால் தங்களுக்கு தேவையானதை கொடுக்க முடியும் என நம்பிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ, அவரை 2024 டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச்சென்றது. அங்கு அணிக்கு தேவையானதை சரியாக செய்த பண்ட், இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற தருணத்தில் பங்கெடுத்தார்.

pant

ஒன்றரை வருடங்கள் விபத்தில் சிக்கி மீண்டுவந்த அவருக்கு உலகக்கோப்பை வென்றது மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்த நிலையில், தற்போது விளையாடுவதற்கு கடினமான வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று வங்கதேசத்துக்கு எதிராக சதத்தையும் பதிவுசெய்து எல்லோரையும் மிரட்சியில் தள்ளியுள்ளார் ரிஷப் பண்ட்.

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தருணம்..

உயிருக்கு ஆபத்தான மிகப்பெரிய கோரமான விபத்திலிருந்து மீண்டுவந்த ஒருவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று சதமடிக்க முடிகிறது என்றால், இதை கிரிக்கெட்டின் சிறந்த தருணம் என்றுதான் வரையறுக்கத் தோன்றுகிறது.

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பழைய தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், இந்திய அணி 376 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். ஏனென்றால் அழுத்தமான நேரத்தில் இந்தியாவை ரன்களுக்கு அழைத்து செல்லும் ஒருவீரராக அவர் மட்டுமே களத்தில் திகழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 39 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார் பண்ட்.

அதற்குபிறகு இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பண்ட், இந்தமுறை தன்னுடைய ஆட்டத்தை சதமாக மாற்றி சாதனை படைத்தார். 13 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 109 ரன்கள் குவித்து மிரட்டினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 6வது சதமாக பதிவுசெய்யப்பட்டது.

ஒரு வருடத்திற்கு முன்புவரை கிரிக்கெட் விளையாடுவாரா என்று பார்க்கப்பட்ட ஒரு வீரர், தற்போது இந்தியாவிற்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக மாறி சாதனை படைத்துள்ளார்.

தோனியின் சாதனை சமன்..

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6வது சதமடித்த ரிஷப் பண்ட், இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் சதங்களை பதிவு விக்கெட் கீப்பராக மாறி சாதனை படைத்தார்.

இந்தப்பட்டியலில் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி மகேந்திர சிங் தோனி 6 சதங்கள் அடித்திருக்கும் நிலையில், 56 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்கள் அடித்து தோனியின் சாதனையை பண்ட் சமன்செய்துள்ளார்.