rishabh pant cricinfo
கிரிக்கெட்

’கம்பேக்-னா இப்படி இருக்கணும்..’ ICC பேட்டிங் தரவரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளிய ரிஷப் பண்ட்!

மிகப்பெரிய கார் விபத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் ரிஷப் பண்ட், சிறந்த கிரிக்கெட் வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

Rishan Vengai

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பண்ட் சென்ற கார் மிகப்பெரிய விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட ஒருவருட காலமாக ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் கூட பங்கேற்காத நிலையில், 15 மாதங்கள் கழித்து 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை இனி அவ்வளவுதான், இனி அவரால் பழையபடியான அதிரடி ஆட்டத்தை விளையாடவே முடியாது” என்ற கூற்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் அவருடைய விபத்தை பார்த்த அவருக்கு கூட அதே எண்ணங்கள்தான் தோன்றியிருக்கும்.

ஆனால் நம்பிக்கையை கைவிடாத ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல்நலத்தை முன்னேற்றியதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய மனதிடத்தையும் மெருகேற்றி களத்திற்கு திரும்பினார். வலைபயிற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பழைய பேட்டிங்கை திரும்பக் கொண்டுவந்த பண்ட், 2024 ஐபிஎல் தொடருக்கு களம்கண்டார்.

pant

2024 ஐபிஎல் தொடரில் விளையாடியபோது, அவர் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறிது கடினப்படுவதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் 2024 ஐபிஎல் தொடர் முடியும்போது, ரிஷப் பண்ட்டால் தங்களுக்கு தேவையானதை கொடுக்க முடியும் என நம்பிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ, அவரை 2024 டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச்சென்றது. அங்கு அணிக்கு தேவையானதை சரியாக செய்த பண்ட், இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற தருணத்தில் பங்கெடுத்தார்.

ஐசிசி தரவரிசையில் 6-வது இடம்..

ஒன்றரை வருடங்கள் விபத்தில் சிக்கி மீண்டுவந்த பண்ட், தற்போது விளையாடுவதற்கு கடினமான வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதத்தை பதிவுசெய்து எல்லோரையும் மிரட்சியில் தள்ளிய ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிராக 1 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் ரிஷப் பண்ட், ஐசிசியின் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பண்ட். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் தரவரிசையில் சிறந்த தரவரிசையில் இருக்கும் விக்கெட் கீப்பராகவும் மாறி அசத்தியுள்ளார்.

விராட் கோலி 7வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு சரிந்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 4வது இடத்தில் நீடிக்கிறார்.